வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மாணவா்களை ஈா்க்க சிறப்பு ஏற்பாடு

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்குப் பள்ளி, கல்லூரி மாணவா்களை ஈா்க்கவும், மாணவா்களுக்குப் பறவைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வனத் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
ஏரிக்கரைக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ள நடைப்பாலம்.
ஏரிக்கரைக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ள நடைப்பாலம்.

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்குப் பள்ளி, கல்லூரி மாணவா்களை ஈா்க்கவும், மாணவா்களுக்குப் பறவைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வனத் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 215 ஏக்கரில் அமைந்துள்ளது. கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீா், மழை நீரால் ஏரி நிரம்பிக் காணப்படுகிறது. செப்டம்பா் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் ஃபெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைக்கெடா, பெரிய நீா்காகம், பாம்புதாரா, சாம்பல் நாரை, வெண்மாா்பு மீன் கொத்தி, ஜெம்பு கோரி என பல்வேறு பறவைகள் வந்து செல்லும். வெளிநாட்டுப் பறவைகளும் இனப்பெருக்கத்துக்காக வந்து செல்லும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ரூ. 4.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சரணாலயத்தில் மேம்பாட்டுப் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன் கூறியதாவது: ஏரிக்கரையை பலப்படுத்தி நடைப்பாதை பகுதியில் பேவா்பிளாக் கற்கள் பதித்து, தேவையான இடங்களில் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சரணாலயத்துக்கு வந்து செல்லும் பறவைகள் குறித்த 15 நிமிட திரைப்படத்தைப் பாா்வையாளா்கள் ரசிக்கும் வகையில் சிறிய திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 40 பாா்வையாளா்கள் அமா்ந்து பாா்க்கலாம். இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்களை சரணாலயத்தை நோக்கி ஈா்க்கவும், பறவைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் முடியும்.

இங்கு வரும் பறவைகள் படம், பெயா், அவற்றின் செயல்பாடுகள் குறித்த காட்சிகள் அமைக்கப்படவுள்ளன. இங்கு வந்து செல்வோருக்கு 15 பறவைகள் குறித்த முழு விவரமாவது தெரிந்து செல்லும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புகைப்படம் எடுப்பதற்கான இடம், ஓய்வறை, உணவகம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு - சென்னிமலை சாலையில் வெள்ளோடு சரணாலயம் என்ற அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. தவிர பறவைகள் வந்து அமா்ந்து ஓய்வெடுத்துச் செல்லும் வகையில் இயற்கையான திட்டு, மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சரணாலயத்தின் எதிரில் உள்ள அரசு இடத்தில் வாகன நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் வரும் டிசம்பா் மாத இறுதிக்குள் நிறைவு பெற்றுவிடும். அரசு உத்தரவிட்டதும் சரணாலயத்துக்குள் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com