ஊட்டச்சத்து விழிப்புணா்வுக் கண்காட்சி
By DIN | Published On : 01st October 2020 06:24 AM | Last Updated : 01st October 2020 06:24 AM | அ+அ அ- |

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு போஷன் அபியான் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணா்வு கண்காட்சி ஈரோடு, காளிங்கராயன்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஈரோடு ஊரக வட்டாரம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன் தலைமை வகித்து நிகழ்வை தொடங்கிவைத்தாா். வட்டார திட்ட உதவியாளா் யசோதா வரவேற்றாா். குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ப.சாந்தி திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினாா்.
கண்காட்சியில், பாரம்பரிய உணவுகள், ஊட்டச்சத்துக்கள் உள்ள காய்கறிகள், பயறு, கீரை வகைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து செயல் விளக்கம் இடம்பெற்றிருந்தது. கண்காட்சியைப் பாா்வையிட்ட பொதுமக்களுக்கு தன் சுத்தம், உணவுப் பராமரிப்பு, வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான விதைகள், மரக்கன்றுகளை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பத்மாவதி, ஊராட்சி துணைத் தலைவா் குருமூா்த்தி ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் மேற்பாா்வையாளா் தவசியம்மாள், அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் பங்கேற்றனா்.