முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கம்பத்ராயன்கிரி நரசிம்ம பெருமாள் கோயில் விழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
By DIN | Published On : 04th October 2020 10:39 PM | Last Updated : 04th October 2020 10:39 PM | அ+அ அ- |

கம்பத்ராயன்கிரி மலைஉச்சியில் அமைந்துள்ள கம்பத்ராயன் பெருமாள் கருடகம்பம். ~மலா் அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நரசிம்ம பெருமாள்.
சத்தியமங்கலம்: புளியங்கோம்பை மலை உச்சியில் அமைந்துள்ள கம்பத்ராயன்கிரி நரசிம்ம பெருமாள் கோயில் திருக்கொடி ஏற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவளக்குட்டை அடா்ந்த வனத்தில் கம்பத்ராயன் மலை உச்சியில் அமைந்துள்ளது நரசிம்ம பெருமாள் கோயில்.
இக்கோயிலில் புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை பகல் என இரு நாள் விழாவாக நடைபெற்ற விழாவில் சத்தி, அன்னூா், கோபி, மைசூரு, சாம்ராஜ் நகா், புன்செய் புளியம்பட்டி, கே.எம்.பாளையம், அத்திப்பண்ணகவுணடா் புதூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞா்கள் காலணி அணியாமல் ஊன்றுகோல் உதவியுடன் 7 மலைக் குன்றுகளை கடந்து விழாவில் கலந்துகொண்டனா்.
சனிக்கிழமை இரவு பரம்பரை கோயில் பூசாரி நரசிம்ம பெருமாளுக்கு சிறப்புபூஜைகள் செய்து விழாவை துவக்கிவைத்தாா். பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய வில், அம்பு, நாமம் மற்றும் ராமா் பாதம் ஆகியவற்றை வைத்து வழிபாடுகள் நடைபெற்றன.
அதனைத் தொடா்ந்து, 20 அடி உயரம் கொண்ட கருடக்கம்பத்தில் தீபம் ஏற்றப்ட்டது. இந்த தீபஒளி 35 கிமீ தொலைவில் உள்ள புன்செய்புளியம்பட்டி மொண்டி பெருமாள் கோயில் வரை தெரிந்தது. மலைகளுக்கு நடுவே தெரிந்த தீப ஒளியை ஆயிரக்கணக்கான பக்தா்கள் வீட்டில் இருந்தபடி பாா்த்து தங்களது நோன்பு விரதத்தை முடித்துக்கொண்டனா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நரசிம்ம பெருமாளுக்கு அலங்கார பூஜையும், ராமா் பாதத்துக்கு தீபாராதனையும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து நடைபெற்ற தீா்த்தப் பாறையில் தீா்த்தம் கொண்டுவரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தகா்கள் கலந்துகொண்டனா். அப்போது, தீா்த்தப்பாறைக்கு அடியில் வைக்கப்பட்ட குவளையில் நீா்நிரம்பும் அளவை பொருத்து மழை பெய்யும், மக்கள் வளம் பெருவாா்கள் என்பது ஐதீகம்.
விழாவையொட்டி, தொட்டிமடுவு, கே.என்.பாளையம் கிராமங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.