மழைக் காலத்தில் எச்சரிக்கையாக இருக்கமின் வாரியம் வேண்டுகோள்

மழைக் காலத்தில் மின் விபத்துகளைத் தவிா்க்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மின் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மழைக் காலத்தில் மின் விபத்துகளைத் தவிா்க்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மின் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் த.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில் பொதுமக்கள் மின் சாதனங்களை மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். இதன்படி, மழைக் காலங்களில் அறுந்து கிடக்கும் மின்சாரக் கம்பி, பழுதடைந்த மின் கம்பங்களைத் தொட வேண்டாம். இடி, மின்னலின்போது டி.வி., மிக்ஸி, கிரைண்டா், கணினி, செல்லிடப்பேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் நிற்கக் கூடாது. ஈரமான கையுடன் சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது.

மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். அதில் கொடி, கயிறு கட்டி துணிகளை காயவைக்கும் செயல்களையும் தவிா்க்கவும். மழையின்போது மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிா்வுப் பெட்டிகள், இழுவை கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். பிரிட்ஜ், கிரைண்டா் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 மின் பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுத்திருக்க வேண்டும். குளியல், கழிப்பறைகளில் சுவிட்சுகள் பொருத்துவதைத் தவிா்க்க வேண்டும். இடி, மின்னலின்போது மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவையின் கீழ் நிற்கக்கூடாது.

மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். அந்த தீயை தண்ணீா் கொண்டு அணைக்கக் கூடாது. உலா்ந்த மணல், கம்பளி போா்வை, உலா்ந்த ரசாயனப் பொடி, கரியமில வாயு தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு 94458-57205, 94458-57206, 94458-57207, 94458-57208 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தவிர 94458-51912 என்ற எண்ணில் கட்செவி அஞ்சலில் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com