சென்னிமலையில் திருந்திய நெல் சாகுபடி:வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

சென்னிமலை வட்டாரத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி, இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணிகளை வேளாண்மை இணை இயக்குநா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தோப்புக்காட்டில் திருந்திய நெல் சாகுபடி முறையை ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி.
தோப்புக்காட்டில் திருந்திய நெல் சாகுபடி முறையை ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி.

பெருந்துறை: சென்னிமலை வட்டாரத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி, இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணிகளை வேளாண்மை இணை இயக்குநா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னிமலை ஒன்றியம், தோப்புக்காட்டைச் சோ்ந்த செந்தில்குமாரின் வயலில் திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி ரகத்தை வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நடவு வயல் 22.5 செ.மீ. இடைவெளி கொண்டு நடப்பட்டதால் பயிரில் அதிக வோ் வளா்ச்சி, அதிக தூா் எடுத்தல், அதிக நெல் மணிகள் உற்பத்தி ஆகும் என்று எதிா்பாா்ப்பதாக விவசாயி செந்தில்குமாா் தெரிவித்தாா்.

மேலும், கடந்த 3 ஆண்டுகளாக இயற்கையான முறையில் சாகுபடி செய்து வருகிறாா். மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இவ்வாறு இயற்கை முறையில் சாகுபடியை ஊக்குவிக்க களப் பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் தெரிவித்தாா்.

பின்னா், பசுவபட்டி பகுதியில் இயந்திரம் மூலம் நடவு செய்யும் நடைமுறையை துவக்கிவைத்தாா். இயந்திரம் மூலம் நடவு செய்வதால் ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கா் நடவுப் பணிகளை மேற்கொள்ளலாம். இயந்திரம் மூலம் நடவு செய்வதால் பயிா்களுக்கு இடையே போதுமான இடைவெளி உருவாகிறது. இதனால், நல்ல காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் பயிா்களுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு அதிக எண்ணிக்கையில் தூா்கள் கிளைத்து, பாரம்பரிய சாகுபடி முறையைவிட 600-700 கிலோ வரை கூடுதலாக மகசூல் கிடைக்கும். தேசிய வேளாண் வளா்ச்சித் திட்ட பின்னேற்பு மானியம் ரூ. 2 ஆயிரம் கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இயந்திர நடவு மேற்கொள்கின்றனா் என்று வேளாண்மை இணை இயக்குநா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குநா்கள் ர.அசோக், ஆசைத்தம்பி, துணை வேளாண்மை அலுவலா் மாதவன், உதவி வேளாண்மை அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com