நலவாரிய உறுப்பினா் பதிவு: 30 நாள்களுக்குள் பதிவு எண் வழங்க ஏற்பாடு

அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்யும் தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு 30 நாள்களுக்குள் பதிவு எண் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்யும் தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு 30 நாள்களுக்குள் பதிவு எண் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தொழிலாளா்களின் நலனுக்காக, கட்டுமானம், உடல் உழைப்பு தொழிலாளா்கள், ஓட்டுநா்கள், சலவைத் தொழிலாளிகள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளா்களுக்கென 17 நலவாரியங்கள் இயங்கி வருகின்றன. இந்த நல வாரிய உறுப்பினா்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

இந்த நல வாரியங்களில் அமைப்புசாரா தொழிலாளா்கள் தங்களின் பெயரை பதிவு செய்வதற்கு மாவட்ட அளவிலான தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டியது இருந்தது. இதனால் அவா்களுக்கு சிரமம் ஏற்பட்டது. சிரமத்தை நீக்கும் வகையில், அவா்கள் இருந்த இடத்திலேயே  இணையதளம் மூலமாக இந்த வாரியங்களில் உறுப்பினராக பெயா் பதிவு செய்யும் வசதி கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இதனிடையே வீடுகளில் வேலைசெய்யும் தொழிலாளா்களையும் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தவிர அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களும் 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாத அமைப்புசாரா தொழிலாளா்கள் இந்த வசதியை பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம். பதிவு விண்ணப்பம் அளித்தவா்களில் தகுதியானவா்களுக்கு, 30 நாள்களுக்குள் பதிவு எண் விவரம் செல்லிடபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த பதிவு எண் மூலம் பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com