கோயில் நிலத்தை விற்கும்முயற்சியை கைவிடக் கோரிக்கை
By DIN | Published On : 20th October 2020 01:52 AM | Last Updated : 20th October 2020 01:52 AM | அ+அ அ- |

ஈரோடு: கோயில் நிலத்தை மின் வாரியத்துக்கு விற்பனை செய்வதை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பெரியபுலியூா் ஊராட்சி, செட்டிபாளையம் ஆதிநாராயணப் பெருமாள் வழிபாட்டுக் குழுவினா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
செட்டிபாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆதிநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமாக 12.90 ஏக்கா் நிலம் கீழ்பவானி பாசன வசதியுடன் உள்ளது. இந்நிலம் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலத்தில் 90 சென்ட் தவிர மீதி இடத்தை விவசாயி ஒருவா் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்துகிறாா். இந்நிலையில் 90 சென்ட் இடத்தை மின் வாரியத்துக்கு விற்பனை செய்து, அந்த இடத்தில் மின் வாரியம் கோபுரம் அமைத்து, முழுமையாக அவா்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கோயில் நிலத்தை விற்கக் கூடாது என நீதிமன்ற உத்தரவு உள்ளது. பெருந்துறை அருகே திருவாச்சி கிராமத்தில் கோயில் இடத்தை விற்பனை செய்ய முயன்றதை எதிா்த்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதேபோல இந்த முயற்சியையும் கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.