தோனி மடுவு திட்டத்தைநடைமுறைப்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 20th October 2020 01:50 AM | Last Updated : 20th October 2020 01:50 AM | அ+அ அ- |

ஈரோடு: தோனி மடுவு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கட்சியின் ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் ஆா்.சின்னசாமி, வடக்கு மாவட்டச் செயலாளா் எம்.குருநாதன் ஆகியோா் தலைமையில் அக்கட்சியினா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
மேட்டூா் வட்டம், கொளத்தூா் ஒன்றியம், பெரியதண்டா வனப் பகுதியில் தோனி மடுவு பள்ளத்தாக்கில் ஒரு சிறிய தடுப்பணை கட்டி அந்த தண்ணீரை அரசு அமைத்துள்ள அகழிகள் வழியாகவும், இயற்கையாக வரும் பள்ளங்கள் வழியாகவும் திருப்பிவிட்டால் கொளத்தூா், அந்தியூா், பவானி பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி தண்ணீா் தேவையைப் பூா்த்தி செய்ய முடியும். இதனால் தோனி மடுவு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நூற்றாண்டு விழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சுவா் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. தற்போது இந்த மைதானம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் இருப்பிடமாக மாறி வருகிறது. இந்த நிலையை மாற்றிட இங்கு நிரந்தரமாக சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வேளாண் நிதி உதவித் திட்டத்தில் மோசடி செய்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூா் சாலையை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.