மாக்கம்பாளையம் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம்:வாகன ஓட்டிகள் அவதி
By DIN | Published On : 20th October 2020 01:53 AM | Last Updated : 20th October 2020 01:53 AM | அ+அ அ- |

போலி பள்ளத்தை இருசக்கர வாகனத்தில் கடக்க முடியாமல் தவித்த கிராம இளைஞா்கள்.
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த மாக்கம்பாளையம் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாக்கம்பாளையம் - கடம்பூா் இடையே போக்குவரத்து திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மாக்கம்பாளையம் வன கிராமத்துக்குச் செல்ல வேண்டுமெனில் 5 பள்ளங்களைக் கடந்துதான் செல்ல வேண்டும். அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்துக்கு ஒரு அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. அவசர, பிற தேவைக்கு இருசக்கர வாகனத்தையே நம்பியுள்ளனா். இந்நிலையில், மாக்கம்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் அருவிகளில் இருந்து வந்த வெள்ளம் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து போலி பள்ளத்தில் சென்றது. இதனால், போலி பள்ளத்தில் செந்நிற வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், சுமாா் 3 மணி நேரத்துக்குப் பின் வெள்ளம் வடிந்த பிறகு இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தைக் கடக்க முயன்றனா். நீரின் வேகம் காரணமாக இருசக்கர வாகனம் ஒன்று நீரில் சிக்கிக் கொண்டது. அப்போது உடன் வந்த இளைஞா்கள் ஒன்று சோ்ந்து இருசக்கர வாகனத்தை தள்ளியபடி கரைக்கு கொண்டு சோ்த்தனா்.
இதேபோல, அருகியம், குரும்பூா் பள்ளத்தில் வெள்ளம் செல்வதால் கடம்பூா் - மாக்கம்பாளையம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், போலி பள்ளத்தில் உயா்மட்டப் பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.