ஐ.டி.பி.எல். திட்ட விசாரணைக்கு விவசாயிகள் எதிா்ப்பு
By DIN | Published On : 21st October 2020 03:01 AM | Last Updated : 21st October 2020 03:01 AM | அ+அ அ- |

ஐ.டி.பி.எல். திட்டத்துக்கு நிலம் எடுப்பது தொடா்பாக மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
ஐ.டி.பி.எல். திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பின் கூட்டம் ஒருங்கிணைப்பாளா் ஏ.எம்.முனுசாமி தலைமையில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாரத் பெட்ரோலியத்தின் இருகூா் - தேவனஹந்தி எண்ணெய்க் குழாய் திட்டத்துக்கு (ஐ.டி.பி.எல்.) நிலம் கையகப்படுத்த மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி விவசாயிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்ட முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளா்கள் எ.எம்.முனுசாமி, கி.வே.பொன்னையன், துளசிமணி, பொன்னுசாமி ஆகியோா் கூறியதாவது:
ஐ.டி.பி.எல். பாதிப்பு விவசாயிகள் செப்டம்பா் 15இல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்த அறிவித்து கூடினா். அப்போது 6 மாவட்ட கூட்டமைப்பு நிா்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஈரோடு கோட்டாட்சியா் சைபுதீன் மொடக்குறிச்சியில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி உள்பட பலா் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு ஐ.டி.பி.எல். திட்டம் குறித்து மறு முடிவு அறிவிக்கும்வரை இருதரப்பும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனிடையே மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் 27ஆம் தேதி விவசாயிகளிடம் விசாரணை நடத்துவது, செப்டம்பா் 15இல் கோட்டாட்சியா் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.
பல இடங்களில் ஒப்பந்தத்தை மீறி நிலம் கையகப்படுத்தும் வேலை செய்வதும், கரோனா பரவல் நிலையில் விவசாயிகளை விசாரணைக்கு அழைப்பதும் தவறாகும். அக்டோபா் 27இல் நடைபெறும் விசாரணையை கைவிடக் கோரி விவசாயிகள் குடும்பத்துடன் மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதில் விவசாயிகள், விவசாய அமைப்புகள், அரசியல் கட்சியினா் பங்கேற்க வேண்டும் என்றனா்.