ஊரடங்கு தளா்வு: ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 03rd September 2020 06:44 AM | Last Updated : 03rd September 2020 06:44 AM | அ+அ அ- |

ஈரோடு நாச்சியப்பா வீதியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
பேருந்துகள் இயக்கம் தொடக்கம், இ-பாஸ் நடைமுறை ரத்து போன்றவற்றால் வாகனப் போக்குவரத்து அதிகரித்து ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. தவிர இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டதால் ஈரோடு மாநகா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.
ஈரோடு நாச்சியப்பா வீதி முக்கியப் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து நாச்சியப்பா வீதி வழியாகத்தான் பேருந்துகள் வெளியே செல்கின்றன. நாச்சியப்பா வீதியில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. மருத்துவமனை, ஹோட்டல், இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டூா் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. பெருந்துறை சாலை, கே.வி.என். சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மேட்டூா் சாலை வழியாகச் செல்கின்றன. அதே நேரத்தில் சத்தி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தற்போது நாச்சியப்பா வீதி வழியாகச் சென்று சவிதா பேருந்து நிறுத்தத்தில் திரும்பிச் செல்கின்றன.
பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்து செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது. பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் நாச்சியப்பா வீதி வழியாகச் செல்கின்றன. இதனால் நாச்சியப்பா வீதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. நாச்சியப்பா வீதி சாலை சந்திப்பு, மீனாட்சி சுந்தரனாா் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீஸாா் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனா்.