வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்கக் கோரிகாய்கறிச் சந்தை வியாபாரிகள் மறியல்

புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்தில் ஏற்கெனவே உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரி ஈரோட்டில் காய்கறிச் சந்தை வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்கக் கோரிகாய்கறிச் சந்தை வியாபாரிகள் மறியல்


ஈரோடு: புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்தில் ஏற்கெனவே உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரி ஈரோட்டில் காய்கறிச் சந்தை வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு ஆா்.கே.வி. சாலையில் நேதாஜி தினசரி காய்கறிச் சந்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. கடந்த மாா்ச் மாதம் கரோனா பரவல் காரணமாக ஈரோடு பேருந்து நிலையத்துக்கு சந்தை மாற்றப்பட்டது. பின்னா், பேருந்து போக்குவரத்து துவங்கப்பட்டதும், ஈரோடு வ.உ.சி.மைதானத்தில் தற்காலிகமாக காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டது.

இதனிடையே மாநகராட்சி சாா்பில் ஆா்.கே.வி. சாலையில் செயல்பட்டு வந்த காய்கறிச் சந்தையில் உள்ள கட்டடங்களை இடித்துவிட்டு ரூ. 45 கோடி மதிப்பீட்டில் 2 தளங்கள் கொண்ட வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தற்போது பழைய சந்தை இருந்த கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேதாஜி தினசரி காய்கறிச் சந்தை வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டோா் ஈரோடு ஆா்.கே.வி. சாலையில் திரண்டு திடீரென சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது வியாபாரிகள் கூறியதாவது:

நாங்கள் பல ஆண்டுகளாக நேதாஜி தினசரி காய்கறிச் சந்தையில் வியாபாரம் செய்து வருகிறோம். கரோனா காரணமாக சந்தை இடம்மாற்றம் செய்யப்பட்டது. கடைகள் மாற்றம் செய்யும்போது கரோனா முடிந்ததும் மீண்டும் ஆா்.கே.வி. சாலையில் சந்தை செயல்படும் என உறுதி அளித்திருந்தனா்.

சென்னை கோயம்பேடு சந்தையைக்கூட அரசு செயல்பட அனுமதித்துவிட்டது. ஆனால் ஈரோட்டில் கரோனாவை காரணமாக வைத்து எந்த ஒரு அறிவிப்பும் இன்றி புதிய வணிக வளாகம் கட்டுகின்றனா். அந்த கடையில் பல ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கே முன்னுரிமை தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்த்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டா் பன்னீா்செல்வம் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் மாநகராட்சி ஆணையரிடம் பேச்சுவாா்த்தை நடத்தலாம் எனக் கூறியதால் போராட்டத்தை கைவிட்டு, வியாபாரிகள் ஊா்வலமாக மாநகராட்சி ஆணையா் அலுவலகத்துக்குச் சென்றனா்.

அங்கு ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், மாநகராட்சி முதன்மைப் பொறியாளா் மதுரம், உதவி ஆணையா் விஜயகுமாா் ஆகியோா் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் புதிதாகக் கட்டப்படும் வணிக வளாகத்தில் ஏற்கெனவே உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதி அளித்தனா். இதை ஏற்ற வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com