அருந்ததியா் சமூகத்துக்கு உள் இட ஒதுக்கீடு கோரி முதல்வருக்கு மனு
By DIN | Published On : 10th September 2020 07:04 AM | Last Updated : 10th September 2020 07:04 AM | அ+அ அ- |

அருந்ததியா் சமூகத்துக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அருந்ததியா் இளைஞா் பேரவை சமூகத் தலைவா்கள் மனு அளித்தனா்.
உச்ச நீதிமன்றத்தில் அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு சிறப்பு வழக்குரைஞா் சோம்நாத்தை நியமனம் செய்து, வெற்றி பெற்றதையடுத்து, அருந்ததியா் சமூகத் தலைவா்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலவா் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனா். அப்போது ஆதி திராவிடா் நலத்துறை அமைச்சா் ராஜலட்சுமி உடனிருந்தாா்.
அவா்கள் அளித்த மனு விவரம்: அருந்ததியா் சமூகத்துக்கு தனி உள் இட ஓதுக்கீடு வழங்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரா்கள் மாவீரன் பொல்லான், குயிலிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். ஈரோட்டில் பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியாா் சிலை அருகில் அம்பேத்கா் சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், அருந்ததியா் இளைஞா் பேரவை, மாவீரன் பொல்லான் பேரவைத் தலைவா் ஈரோடு வடிவேல் ராமன், ஆதித் தமிழா் மக்கள் கட்சித் தலைவா் டாக்டா் எஸ்.டி.கல்யாணசுந்தரம், அருந்ததியா் உரிமை பாதுகாப்புக் குழுத் தலைவா் ஐ.வி.எஸ்.மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.