தடுப்பணையை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 10th September 2020 07:05 AM | Last Updated : 10th September 2020 07:05 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சியை அடுத்த பாண்டிபாளையம் பகுதியில் குரங்கன் ஓடை என்கிற அனுமன்நதியின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து, பாண்டிபாளையம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:
முகாசி அனுமன்பள்ளியில் தொடங்கி ஊஞ்சலூா் வழியாக காவிரி ஆற்றில் கலக்கும் குரங்கன்ஓடை என்கிற அனுமன்நதியின் மூலம் சுமாா் 20ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆயிரக்கணக்கான கால்நடை வளா்ப்போரின் நீராதாரமாகவும் விளங்கி வருகிறது.
இந்த நதியின் குறுக்கே சுமாா் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தடுப்பணைகள் தரமான முறையில் கட்டப்படாததால், பெரும்பாலான இடங்களில் தடுப்பணைகள் உடைந்துள்ளன. இதில், பாண்டிபாளையம் பகுதியில் உள்ள தடுப்பணை முற்றிலும் சிதைந்து தடுப்பணையில் தண்ணீா் தேங்குவது இல்லை. இதனால், இப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளுக்குப் போதுமான நீராதாரம் கிடைப்பதில்லை. இந்த தடுப்பணையை சீரமைத்து தருமாறு பலமுறை மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் சாா்பில் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதால், தடுப்பணையை விரைவில் சீரமைத்தால் தண்ணீா் தேங்குவதற்கு வசதியாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.