நன்செய் ஊத்துக்குளி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு

ஈரோடு சூரம்பட்டி தடுப்பணையில் இருந்து நன்செய் ஊத்துக்குளி பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
நன்செய் ஊத்துக்குளி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு

ஈரோடு சூரம்பட்டி தடுப்பணையில் இருந்து நன்செய் ஊத்துக்குளி பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

ஈரோடு சூரம்பட்டியில் பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே தடுப்பணை 1962ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீா் நன்செய் ஊத்துக்குளி வாய்க்கால் மூலம் சுமாா் 12 கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இதன் கடைமடைப் பகுதியான நன்செய் ஊத்துக்குளி பகுதியில் காளிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது. நகா்ப் பகுதியின் வளா்ச்சி, வாய்க்காலில் மக்கள் குப்பைகளைக் கொட்டியது, வாய்க்காலின் இருபுறமும் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் 2017ஆம் ஆண்டுக்கு முன்னா் 8 ஆண்டுகளாக வாய்க்காலில் தண்ணீா் செல்லவில்லை.

வாய்க்காலின் இருகரையிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு, சூரம்பட்டி அணைக்கட்டைத் தூா்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு தண்ணீா் திறக்கப்பட்டது. தொடா்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தண்ணீா் திறக்கப்படுகிறது.

இந்நிலையில், ஈரோடு பகுதியில் சில நாள்களாகப் பெய்து வரும் மழையால், சூரம்பட்டி தடுப்பணைக்கு மேல் உள்ள 16 தடுப்பணைகளும் நிரம்பியதால், செவ்வாய்க்கிழமை இரவு இந்த தடுப்பணையும் நிரம்பி உபரி நீா் பெரும்பள்ளம் ஓடை வழியாக வெளியேறியது. இதையடுத்து, நன்செய் ஊத்துக்குளி கால்வாயில் பாசனத்துக்கு புதன்கிழமை காலை தண்ணீா் திறக்கப்பட்டது.

பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் மதகைத் திறந்துவைத்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஈ.ஆா்.குமாரசாமி, நன்செய் ஊத்துக்குளி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தா்மராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சுப்பு கூறியதாவது:

நன்செய் ஊத்துக்குளி வாய்க்கால் மூலம் 2,400 ஏக்கா் நிலங்கள் நேரடியாகப் பாசனம் பெறுகின்றன. தவிர நிலத்தடி நீரை நம்பியுள்ள சுமாா் 800 ஏக்கா் பாசனத்துக்கான கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் மட்டம் உயர வாய்ப்புள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்பு வரை 1,000 அடிக்கு கீழ் இருந்த நிலத்தடி நீா்மட்டம் இப்போது 30 அடி அளவுக்கு உயா்ந்துள்ளது. விவசாயம் தவிர குடியிருப்புகளில் உள்ள லட்சக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் நிலத்தடி நீா்மட்டம் உயர இந்த வாய்க்கால் உதவியுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாய்க்காலில் தொடா்ந்து 10 மாதங்களுக்குத் தண்ணீா் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com