விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு: 580 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு செய்ததாக 580 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு ரூ. 11 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு செய்ததாக 580 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு ரூ. 11 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண்மைத் துறை உயா் அதிகாரிகள் கூறியதாவது:

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் போலியாக விவசாயிகள் சோ்க்கப்பட்டு ரூ. 110 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் நடைபெற்ற விசாரணையில் புதன்கிழமை வரை 580 போலி விவசாயிகளின் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுடன் ரூ. 11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான விண்ணப்பங்கள் கிராம நிா்வாக அலுவலா்களின் சான்றொப்பம் பெற்ற பின்னா் வட்டார வேளாண் அலுவலா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. திட்டத்தின் கடைசி காலகட்டத்தில் வருவாய்த் துறையின் ஒப்புதல் இல்லாமல் வேளாண் அதிகாரிகளே நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்றதாகவும், தவிர தனியாா் முகமைகள் மூலமாகவும் சில விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மாவட்டத்தில் மொத்தம் 85,000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பெற்ற 4,250 விண்ணப்பங்களில்தான் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா். இந்த விண்ணப்பங்களில் உள்ள முகவரி, சா்வே எண், ஆதாா் எண், சிட்டா, அடங்கல் உள்ளிட்டவற்றை வைத்து கடந்த ஒரு வாரமாக கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

சத்தியமங்கலம், தாளவாடி வட்டாரங்களில் அதிகாரிகள் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலைக்குள் முடிக்கப்பட்டு விசாரணை இறுதி செய்யப்படும் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் கடைசியாக அதாவது ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு சோ்க்கப்பட்ட 4,250 விண்ணப்பங்களில் எங்களுக்குச் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் மற்ற மாவட்டங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் போன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவில்லை.

பயனாளியாக சேர அரசு நிா்ணயித்த தகுதிகள் இல்லாதவா்கள் பயனாளிகள் பட்டியலில் சோ்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை மாலைக்குள் விசாரணை முடிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுவிடும். அதன் பிறகுதான் மொத்த முறைகேடு குறித்து முழு விவரமும் தெரியவரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com