கொடுமணல் அகழாய்வுப் பணியில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

சென்னிமலை அருகே நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் 3 முதுமக்கள் தாழிகள் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.
கொடுமணலில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி.
கொடுமணலில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி.

சென்னிமலை அருகே நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் 3 முதுமக்கள் தாழிகள் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. தாழிக்குள் இருந்த எலும்புகள் ஆய்வுக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த கொடுமணல் கிராமத்தில் 2,300 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால், பல்வேறு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இந்திய தொல்லியல் துறையின் திட்ட இயக்குநா் ஜெ.ரஞ்சித் தலைமையில், உதவி தொல்லியலாளா் நந்தகுமாா், தொல்லியல் வல்லுநா் சுப்பிரமணியம் ஆகியோா் மேற்பாா்வையில் கொடுமணல் பகுதியில் கடந்த 4 மாதங்களாக அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வுப் பணியில் அணிகலன்கள் தயாா் செய்த தொழிற்சாலைகளும், வெள்ளி, செம்பு நாணயங்கள், சூது பவள கல்மணிகள், வாள், சிறிய கத்திகள், மண் குவளை, மண் ஜாடிகள் உள்பட ஏராளமான பொருள்களையும் கண்டுபிடித்தனா்.

தற்போது, கல்லறைகள் இருந்த பகுதியில் ஆய்வு செய்தபோது பெரிய அளவிலான 3 தாழிகள் மண்ணில் புதைந்து கிடந்தன. இதில், ஒரு பானையை புதுச்சேரி பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியா் கே.ராஜன் தலைமையில், கீழடி அகழாய்வுத் துறையின் துணை இயக்குநா் சிவானந்தம், கீழடி அகழாய்வாளா் பாஸ்கா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். மண் நிரம்பிக் கிடந்த அந்தப் பானையில் மனிதனின் உடைந்த மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் ஆகியவை இருந்தன. இதில், சில மாதிரிகளை டி.என்.ஏ. பரிசோதனைக்காக ஆய்வுக் குழுவினா், மதுரை, காமராஜா் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு எடுத்துச் சென்றனா்.

தற்போதைய ஆய்வில், செங்கற்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கல்மணிகளும், பிராமி எழுத்துகளையும் கண்டுபிடித்துள்ளனா். இந்த அகழாய்வுப் பணி செப்டம்பா் 30 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது என இந்திய தொல்லியல் துறையின் திட்ட இயக்குநா் ஜெ.ரஞ்சித் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com