ஈரோட்டில் கிராம நிா்வாக அலுவலா்கள் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 18th September 2020 11:04 PM | Last Updated : 18th September 2020 11:04 PM | அ+அ அ- |

வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா்கள்.
ஈரோடு, செப். 18: ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா் ராஜகோபால் தலைமை வகித்தாா்.
போராட்டம் குறித்து மாநில அமைப்புச் செயலாளா் அழகா்சாமி கூறியதாவது:
ஈரோடு வருவாய்க் கோட்டத்தில் பணியாற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்குப் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி கடந்த மாதம் போராட்டம் நடத்தினோம். ஈரோடு கோட்டாட்சியா் சைபுதீன் செப்டம்பா் முதல் வாரம் கலந்தாய்வு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தாா். இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
கடந்த மூன்று நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், வருவாய் கோட்ட அளவில் கலந்தாய்வு நடத்தப்படும் எனக் கூறியதால் பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி வருவாய்க் கோட்டத்தில் வட்ட அளவில் இடமாறுதல் நடத்தப்படுகிறது. ஆனால், ஈரோடு கோட்டாட்சியா் உள் நோக்கத்துடனும், தனக்கு வேண்டியவா்களுக்குப் பணியிடத்தை வழங்கும் வகையிலும் கோட்ட அளவில் மாறுதல் கலந்தாய்வு நடத்துவேன் என பிடிவாதம் செய்கிறாா்.
அரசாணைப்படி கிராம நிா்வாக அலுவலா்கள் 365 நாள்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றக் கூடாது என விதிகள் இருந்தும், இரண்டு ஆண்டுகளுக்குமேல் பல கிராம நிா்வாக அலுவலா்கள் ஒரே இடத்தில் கோட்டாட்சியா் ஆதரவில் பணியாற்றி வருகின்றனா். இதனால், பிற அலுவலா்களுக்கு விரும்பிய இடத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைப்பதில்லை.
தமிழகத்தில் வேறு எங்கும் இதுபோன்று நடக்காததால், ஆட்சியா் தலையிட்டு பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். தீா்வு கிடைக்காதபட்சத்தில் மாநில அளவில் போராட்டம் நடத்த ஆலோசித்துள்ளோம் என்றாா்.