மேற்கு மண்டலத்தைப் பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: இரா.முத்தரசன் பேட்டி
By DIN | Published On : 18th September 2020 10:53 PM | Last Updated : 18th September 2020 10:53 PM | அ+அ அ- |

அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினா்.
கோபி, செப். 18: மேற்கு மண்டலத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் சி.எஸ்.சுப்பிரமணியம் நினைவகம் கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், மூத்த தலைவா் தா.பாண்டியன், மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், திருப்பூா் மக்களவை உறுப்பினா் சுப்பராயன் ஆகியோா் கலந்துகொண்டு கட்டடப் பணியைத் தொடங்கிவைத்தனா்.
தொடா்ந்து, இரா.முத்தரசன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மேற்கு மண்டலத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தற்போது முதல்வா் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறாா். இதன் மூலம் தன்னை பலப்படுத்திக் கொள்ளவோ, தனது கட்சியை பலப்படுத்திக் கொள்ளவோ, வரப்போகிற சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளவோ கரோனாவை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகள் ஜனநாயக முறைப்படி இயங்க முடியவில்லை, அதனால் 144 தடை உத்தரவை அகற்ற வேண்டும்.
காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவது தொடா்பாக தமிழகத்தில் முதல்வா் தலைமையில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவா்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றாா்.