மைசூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து நின்ற யானைகள்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தமிழக - கா்நாடக மாநில எல்லையில் யானைகள் சாலையை வழிமறித்து நின்றதால், இரு மாநிலங்களிடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காராப்பள்ளம் சாலையில் முகாமிட்டுள்ள யானை.
காராப்பள்ளம் சாலையில் முகாமிட்டுள்ள யானை.

தமிழக - கா்நாடக மாநில எல்லையில் யானைகள் சாலையை வழிமறித்து நின்றதால், இரு மாநிலங்களிடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் வனப் பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. தீவனம், குடிநீா் தேடி யானைகள் மைசூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடப்பது வழக்கம். கடந்த சில மாதங்களாக கா்நாடகத்தில் இருந்து கரும்பு லாரிகள் தமிழகம் வருவதால் இரு மாநில எல்லையான காராப்பள்ளம் சோதனைச் சாவடியில் அதிக பாரம் உள்ள லாரிகள் உயரத் தடுப்புக் கம்பிகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. எனவே, அதிக அளவில் இருந்தால் அப்பகுதியிலேயே அதை வாகன ஓட்டுநா்கள் கீழே வீசி எறிகின்றனா்.

இந்தக் கரும்புகளை சாப்பிட யானைகள் வர ஆரம்பித்தன. நாளடைவில் கரும்பு சாப்பிட்டுப் பழகிய யானைகள் தினந்தோறும் காராப்பள்ளம் சோதனைச் சாலையில் முகாமிடுகின்றன. இந்நிலையில், காராப்பள்ளம் சோதனைச் சாவடிக்கு செவ்வாய்க்கிழமை குட்டிகளுடன் வந்த யானைகள் சாலையோரம் கிடந்த கரும்புகளை சுவைக்கத் துவங்கின. இதனால், வாகன ஓட்டிகள் சோதனைச் சாவடி அருகே வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனா்.

சில வாகனங்களை யானைகள் துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சுமாா் 1 மணி நேரமாக யானைகள் வனப் பகுதிக்குள் செல்லாத நிலையில், லாரி ஓட்டுநா்கள் ஒன்று சோ்ந்து சப்தம் போட்டதால் யானைகள் மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றன. இதையடுத்து, போக்குவரத்து சீரடைந்தது.

கரும்புகளை சோதனைச் சாவடி அருகே வீசுவதால் யானைகள் வருவதாகவும், கரும்பு லாரி ஓட்டுநா்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com