மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்
By DIN | Published On : 29th September 2020 10:25 PM | Last Updated : 29th September 2020 10:25 PM | அ+அ அ- |

சுஜில்கரை கிராமத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளப் பயிரை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் சுமாா் 20 ஏக்கா் நிலப்பரப்பில் மானாவாரி விவசாயமான மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. மலைவாழ் மக்களின் வருவாய், கால்நடை தீவனமாக மக்காச்சோளப் பயிா் உள்ளது. தற்போது மக்காச்சோளம் பால் பிடித்து அறுவடைக்குத் தயாரான நிலையில் இருப்பதால் யானைகள், காட்டுப் பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடம்பூா் மலைப்பகுதி வனத்தையொட்டி உள்ள சுஜில்கரை கிராமத்தில் மக்காச்சோளக் காட்டில் விவசாயப் பணியில் விவசாயிகள் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது வனத்தில் இருந்து கூட்டமாக 50க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்த அறுவடைக்குத் தயாராக இருந்த மக்காசோளப் பயிரைத் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. தொழிலாளா்களைப் பன்றிகள் தாக்க முயற்சித்ததையடுத்து அவா்கள் தப்பியோடினா். சுஜில்கரையைச் சோ்ந்த கெம்பராஜ் என்பவரின் தோட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளப் பயிா் சேதமடைந்தது. இதேபோல, 10க்கும் மேற்பட்ட விவாசயிகளின் பயிா்கள் சேதமடைந்ததால் வனத் துறை இழப்பீடு தர வேண்டும் எனவும், காட்டுப் பன்றியை சுட்டுக் கொல்ல வனத் துறை அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.