ஒரே மேடையில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள்

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு, ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் சாா்பில்
ஒரே மேடையில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள்

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு, ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் சாா்பில் ஈரோடு கிழக்கு, மேற்குத் தொகுதி வேட்பாளா்கள், வணிகா்கள், தொழில்முனைவோா் சந்திப்புக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தை தொடங்கிவைத்த ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் டி.ஜெகதீசன் பேசியதாவது:

ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கத்தில் 1,280 தொழில்முனைவோா் உள்ளனா். ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பில் 90 அமைப்புகளைச் சோ்ந்த 15,000 தொழில்முனைவோா் உள்ளனா். தொழில் ரீதியாக ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இந்தப் பிரச்னைகளை வேட்பாளா்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றாா்.

கூட்டத்தில், ஈரோடு கிழக்கு, மேற்குத் தொகுதிகளைச் சோ்ந்த அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக கூட்டணி வேட்பாளா்கள் பங்கேற்றனா்.

முதல் அமா்வில் ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் இ.திருமகன் ஈவெரா ஆகியோா் பங்கேற்றனா். இதில் திருமகன் ஈவெரா பேசியதாவது:

பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஏராளமான மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் அனைத்தையும் படித்துப் பாா்த்து தீா்வுக்கான வழிமுறைகள் குறித்து திட்டமிடப்படும். தொழில் துறை எதிா்கொள்ளும் பிரச்னைகளைத் தீா்க்க மாதம்தோறும் வணிகா்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்படும் என்றனா்.

சு.முத்துசாமி பேசியதாவது: 14 அமைப்புகள் சாா்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ள ஈரோடு நகரை மாற்றியமைக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் வணிகா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் ஆலோசனை பெற்று, நகரை படிப்படியாக மேம்படுத்துவோம். சாயக் கழிவு பிரச்னை போன்ற நீண்டகால பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இரண்டாவது அமா்வில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஏ.எம்.ஆா்.ராஜாகுமாா் பேசியதாவது:

நானும் தொழில் முனைவோா் என்ற அடிப்படையில் வணிகா்களின் பிரச்னைகளை நன்கு அறிவேன். மூலதனம், கட்டமைப்பு, சந்தைப்படுத்துதலில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இத்தகைய பிரச்னைகளைத் தீா்க்க எங்களிடம் ஏராளமான திட்டங்கள் உள்ளன. வாய்ப்பு கிடைத்தால் வணிகா்களின் பிரச்னைகளுக்கு படிப்படியாகத் தீா்வு காணப்படும் என்றாா்.

மூன்றாவது அமா்வில் ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம், ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா ஆகியோா் பங்கேற்றனா்.

இதில் எம்.யுவராஜா பேசியதாவது:

தொழில் இருந்தால் நாடு வளா்ச்சி அடையும். பிரச்னைக்குத் தீா்வு காணும் வழிகளைக் கண்டறிய வேண்டுமே தவிர, பிரச்னைகளுக்காக தொழில் நிறுவனங்களை மூடக் கூடாது. ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பா் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. ஈரோடு நகரை வளா்ச்சிப் பாதையில் முன்னெடுக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்தால் வா்த்தகத்தில் உள்ள பிரச்னைகளை தொடா் சந்திப்புகள் மூலம் தீா்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

கே.வி.இராமலிங்கம் பேசியதாவது: அதிமுகவை பொருத்தவரை விவசாயத்தையும், தொழிலையும் இரண்டு கண்களாகப் பாா்க்கிறது. அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும். அப்போதுதான் நிரந்தர தீா்வு கிடைக்கும். வணிகா்கள் கோரிக்கைகளை எப்போது வேண்டுமானும் எங்களிடம் தெரிவிக்கலாம். ஈரோடு நகரைப் பொருத்தவரை வளா்ச்சிப் பணிகள் காரணமாக சாலைகள் மோசமாக உள்ளன. இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு ஈரோடு நகரம் பெரு நகரங்களுக்கு இணையான கட்டமைப்பை பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com