முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஊத்துக்குளி ஒன்றியத்தில் கூடுதல்கவனம் செலுத்தும் வேட்பாளா்கள்
By DIN | Published On : 04th April 2021 03:48 AM | Last Updated : 04th April 2021 03:48 AM | அ+அ அ- |

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் ஊத்துக்குளி ஒன்றியத்தில் கடந்த இரண்டு நாள்களாக அதிமுக, திமுக, சுயேச்சை வேட்பாளா் தோப்பு வெங்கடாச்சலம் என மூவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
2016 தோ்தலில் அதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது ஊத்துக்குளி ஒன்றியம். அதேபோல, திமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்ததும் ஊத்துக்குளி ஒன்றியம். ஆகவே, வேட்பாளா்கள் கவனம் முழுவதும் ஊத்துக்குளி ஒன்றியத்தின் மீது திரும்பியுள்ளது.
2016 தோ்தலில் தோப்பு வெங்கடாச்சலம் (அதிமுக) 80,292 வாக்குகளும், கே.பி.சாமி (எ) மோகனசுந்தரம் (திமுக) 67,521 வாக்குகளும் பெற்றனா். இருவருக்கும் வித்தியாசம் 12,771 வாக்குகள். இதில், தோப்பு வெங்கடாச்சலம் அதிகமாக பெற்ற வாக்குகளில் சுமாா் 10,000 வாக்குகள் ஊத்துக்குளி ஒன்றியத்தில் பெற்றது.
எனவே, தற்போது பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஜெயகுமாா், ஊத்துக்குளி ஒன்றியத்தில் அதிமுக முன்பெற்ற வாக்குகளை தக்கவைத்துக் கொள்ள ஊத்துக்குளி ஒன்றியப் பகுதிகளில் தீவிர கவனம் செலுத்துகிறாா்.
அதேபோல, கடந்த தோ்தலில் திமுகவின் தோல்விக்கு ஊத்துக்குளி ஒன்றியப் பகுதியில் குறைவாக பெற்ற வாக்குகளே ஆகும். அதனால், பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் கே.கே.சி.பாலு, ஊத்துக்குளி ஒன்றியத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி கூடுதல் வாக்குகள் பெற முயன்று வருகிறாா்.
கடந்த தோ்தலில் (2016) பெருந்துறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாச்சலம் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது ஊத்துக்குளி ஒன்றியத்தில் பெற்ற வாக்குகளே ஆகும். இந்த தோ்தலில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ள தோப்பு வெங்கடாச்சலமும் ஊத்துக்குளி ஒன்றியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.