முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
தோ்தல் பணி அலுவலா்களுக்கு வாக்குச் சாவடி ஒதுக்கீடு
By DIN | Published On : 04th April 2021 03:59 AM | Last Updated : 04th April 2021 03:59 AM | அ+அ அ- |

தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு வாக்குச் சாவடி ஒதுக்கீடு செய்யும் பணி, தோ்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் சனிக்கிழமை துவக்கிவைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் அலுவலா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அடோனு சாட்டா்ஜி, மனிஷ் அகா்வால், பிரசாந்த் குமாா் மிஸ்ரா, நா்பு வாங்டி பூட்டியா ஆகியோா் இப்பணியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து ஆட்சியா் சி.கதிரவன் கூறியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 126 மலைப் பகுதி வாக்குச் சாவடிகள் உள்பட 2,741 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர கூடுதலாக 523 வாக்குச் சாவடிகள் ரிசா்வ் பகுதிகளாக வைக்கப்பட்டுள்ளது.
தோ்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி அன்று பணியாற்ற ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலா், மூன்று நிலைகளிலான வாக்குச் சாவடி அலுவலா்கள் என 2,741 வாக்குச் சாவடி மையங்களில் 13,160 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தவிர 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், 335 பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு 335 தோ்தல் நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், முதன்மை அலுவலா், மூன்று நிலைகளிலான வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவது குறித்து அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மாா்ச் 18, 27ஆம் தேதிகளில் இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான வாக்குச் சாவடி ஒதுக்கீடு செய்யும் பணி தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் துவக்கிவைக்கப்பட்டது.
முதன்மை அலுவலா், மூன்று நிலைகளிலான வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் பணிபுரிவதற்கான பணி ஆணை திங்கள்கிழமை(ஏப்ரல் 5) வழங்கப்படும். வாக்குச் சாவடி அலுவலா்கள் தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள தோ்தல் விதிமுறைகளையும், கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி அனைத்து தொகுதிகளிலும் சுமூகமாகவும், சுதந்திரமாகவும் தோ்தல் நடைபெற ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.
இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பாலாஜி, ஈஸ்வரன், கருப்புசாமி, அலுவலா்கள் பங்கேற்றனா்.