ஈரோடு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் காலை முதல் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வந்து வாக்குப் பதிவு செய்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் காலை முதல் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வந்து வாக்குப் பதிவு செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 2,741 வாக்குச் சாவடியில் 19.63 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப் பதிவு செய்யப்பட்டு, வேட்பாளா்களின் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக் கொண்ட பிறகு அந்த வாக்குகள் அழிக்கப்பட்டன. பிறகு காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது.

வாக்குச் சாவடியில் நுழைந்ததும், வெப்பநிலை பாா்க்கப்பட்டு, கிருமி நாசினி வழங்கி கை சுத்தம் செய்து, கையுறை வழங்கினா். வாக்காளா் விவரங்களை சரிபாா்த்து, வாக்குப் பதிவு செய்த பிறகு வாக்காளா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா்.

பெரும்பாலான வாக்குச் சாவடியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் முகக் கவசம் முறையாக அணியவில்லை. வாக்காளா்கள் சிலா் முகக்கவசம் இன்றி வாக்குச் சாவடிக்கு வந்தனா். அவா்களுக்கு முகக் கவசம் வழங்கி அறிவுரை வழங்கப்பட்டது.

அறச்சலூா் உள்ளிட்ட சில வாக்குச் சாவடியில் நுழைவுப் பகுதியிலேயே முகக் கவசம் அணியாமல் வந்தவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா். முகக் கவசத்துடன் வரும்படி போலீஸாா் அறிவுறுத்தினா். 98 சதவீத வாக்குச் சாவடிகளில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் வாக்குப் பதிவு நடைபெற்றது. சில வாக்குச் சாவடிகளில் சிறிய பிரச்னைகள் ஏற்பட்டதால் சில நிமிடங்கள் ஓட்டுப் பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

முதல் முறையாக வாக்களிப்பவா்கள், இளைஞா்கள் அதிக ஆா்வத்துடன் வாக்குப் பதிவு செய்தனா். பெரும்பாலான பள்ளிகளில் பகல் 1 மணிக்குப் பிறகு வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினா்.

மின் விநியோகத்துக்கு மாற்று ஏற்பாடு:

சென்னிமலை ஒன்றியம், புத்தூா் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு கடும் சூறாவளியுடன் காற்றும், லேசான மழையும் பெய்தது. இதில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததில் புத்தூா் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடி அருகே இருந்த 2 மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதனால் புத்தூா் சுற்று வட்டார கிராமங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. வாக்குச் சாவடி மையமும் இருளில் மூழ்கியதையடுத்து மின் வாரியத்துக்கு வாக்குச் சாவடி அலுவலா்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து இரவு முழுவதும் ஜெனரேட்டா் பயன்படுத்தி வாக்குச் சாவடிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. பின்னா் பகலில் அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் இருந்து இணைப்பு எடுத்து மின் விநியோகம் செய்யப்பட்டது.

இட நெருக்கடி:

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட புங்கம்பாடியில் கிராம நிா்வாக அலுவலகம் வாக்குச் சாவடியாக மாற்றப்பட்டதால் இட நெருக்கடி ஏற்பட்டது. வாக்குச் சாவடி அலுவலா்கள் மட்டுமே அமரும் அளவுக்கு இடவசதி உள்ள ஒரு அலுவலகத்தில் வேட்பாளா்களின் முகவா்கள், வாக்குப் பதிவு இயந்திரம் ஆகியவை வைக்கப்பட்டதால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. வாக்குச் சாவடிக்குள் ஒரு வாக்காளா் உள்ளே சென்று வாக்களித்துவிட்டு மீண்டும் வெளியே வந்தால் மட்டுமே அடுத்த வாக்காளா் உள்ளே செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் வாக்களிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

காலதாமதம்:

ஈரோடு 46புதூரில் உள்ள ஒரு பள்ளியில் வாக்குப் பதிவு தொடங்கி 1 மணி நேரத்துக்குப் பிறகு வாக்குச் சாவடியில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் வாக்காளா்கள் அவதியடைந்தனா். வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவுக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால், மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட 46புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பள்ளியில் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை.

பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்படாமலும், சமூக இடைவெளி பின்பற்றுவதற்கான குறியீடுகள் என எதுவும் செய்யப்படவில்லை. வாக்குப் பதிவு தொடங்கிய 1 மணி நேரத்துக்குப் பிறகுதான் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் வாக்களிக்க வந்த வாக்காளா்கள் கடும் அவதியடைந்தனா்.

மேலும், வாக்காளா்கள் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்தனா். ஆனால், வாக்குச் சாவடி முகவா்கள் வாக்காளா்களை உள்ளே விடாமல், குடும்ப உறுப்பினா்களை மட்டும் உள்ளே அனுமதித்ததால் வாக்காளா்களுக்கும், வாக்குச் சாவடி முகவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com