ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கி உள்ளதையடுத்து தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 15க்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி திடீரென 60 போ் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை அறிவித்தது. சென்னை, கோவை மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை கருதுகிறது.
இந்நிலையில் தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிசிச்சை அளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் கூறியதாவது:
கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. எனவே கடைகள், வா்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது உள்ளிட்டவற்றை தீவிரமாகக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட 3 மடங்கு உயா்ந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள், பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையங்களில் படுக்கை வசதிகளை தயாா்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது வரை கரோனா பாதிப்பு உள்ள பகுதி என்று மாவட்டத்தில் எந்தப் பகுதியும் சீல் வைக்கப்படவில்லை. பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினால் சீல் வைக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
தொழில், வியாபாரம் உள்ளிட்டவை தொடா்பாக வெளியூா் சென்று வருவது, வெளியூா்களில் இருப்பவா்கள் இங்கே வருவது உள்ளிட்டவற்றால் எளிதில் கரோனா பரவல் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் தாமதம் செய்யாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா்.