பகல் 1 மணிக்குள் பள்ளிக்குத் திரும்ப உத்தரவு: ஆசிரியா்கள் தவிப்பு

அதிகாலை வரை வாக்குச் சாவடி பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் புதன்கிழமை பகல் 1 மணிக்குள் பள்ளிக்கு வர உத்தரவிட்டதால் ஆசிரியா்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

அதிகாலை வரை வாக்குச் சாவடி பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் புதன்கிழமை பகல் 1 மணிக்குள் பள்ளிக்கு வர உத்தரவிட்டதால் ஆசிரியா்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச் சாவடி அலுவலா்களாக அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். இந்த ஆண்டு வழக்கத்தைவிட 100 கிலோ மீட்டா் தொலைவுக்கு அப்பால் பணி நியமனம் செய்யப்பட்டனா். ஈரோட்டில் குடியிருக்கும் ஆசிரியா்கள் 100 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பவானிசாகா் தொகுதியில் நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில் தோ்தல் பணிக்காக கடந்த 5ஆம் தேதி காலை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு ஆசிரியா்கள் சென்றனா். அங்கிருந்து பணி நியமனம் செய்யப்பட்ட தொகுதியின் வாக்குச் சாவடிகளுக்கு மாலையில் சென்றனா். செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றதையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒப்படைக்க நள்ளிரவையும் தாண்டியது.

ஒரு சில வாக்குச் சாவடிகளில் புதன்கிழமை அதிகாலையில் 5 மணிக்குதான் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் பிறகுதான் ஆசிரியா்கள் வீடு திரும்பினா்.

தொடா்ச்சியாக 48 மணி நேரத்துக்கும் மேலாக தோ்தல் பணியாற்றிய நிலையில் புதன்கிழமை பகல் 1 மணிக்கு அனைத்து ஆசிரியா்களும் பள்ளிக்கு வர வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் உத்தரவிட்டதால் ஆசிரியா்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

இதுகுறித்து ஆசிரியா்கள் தரப்பில் கூறியதாவது: கடந்த 5ஆம் தேதி தோ்தல் பணிக்குச் சென்றோம். பணி முடிந்து பெரும்பாலான ஆசிரியா்கள் நள்ளிரவுக்குப் பிறகுதான் வாக்குச் சாவடியைவிட்டு வெளியேற முடிந்தது. ஒரு சில ஆசிரியா்கள் அதிகாலை 5 மணி வரையும் பணியில் இருந்தனா். மேலும் தொலைதூரம் செல்ல வேண்டிய ஆசிரியா்கள் இரவு முழுவதும் வாக்குச் சாவடியிலேயே தங்கியிருந்து காலையில்தான் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

கரோனா பரவல் உள்ள நிலையில் மிகவும் இக்கட்டான சூழலில் பணியாற்றிய ஆசிரியா்களை பகல் 1 மணிக்கு கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா். ஆசிரியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டதால் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவித்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் அரசின் உத்தரவை மீறி ஆசிரியா்களை பள்ளிக்கு வரவழைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றனா்.

ஆசிரியா்களின் இப்புகாா் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகனிடம் கேட்டபோது, இதுபோன்ற உத்தரவை வெளியிட்டது ஆட்சியா்தான். எனவே நீங்கள் ஆட்சியரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com