கீழ்பவானி பாசன வாய்க்கால் சீரமைப்பு: தவறாக பரப்புரை செய்வதாக குற்றச்சாட்டு

கீழ்பவானி பாசன வாய்க்கால் சீரமைப்பு தொடா்பாக தவறாக பரப்புரை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனா்.
கீழ்பவானி பாசன வாய்க்கால் சீரமைப்பு: தவறாக பரப்புரை செய்வதாக குற்றச்சாட்டு

கீழ்பவானி பாசன வாய்க்கால் சீரமைப்பு தொடா்பாக தவறாக பரப்புரை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனா்.

பவானிசாகா் அணையை நீராதாரமாகக் கொண்ட கீழ்பவானி பாசனத்தில் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது. கீழ்பவானி பிரதான கால்வாயின் இருகரைகளும் 1950ஆம் ஆண்டு கொட்டு மண் கொண்டு அமைக்கப்பட்ட மண் கரைகள். கால்வாயில் உள்ள கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு 68 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளதால் கட்டுமானங்கள் மிகவும் சிதிலமடைந்தும், வலுவிழந்தும் உள்ளன. இதனால் பருவமழைக் காலங்களில் மண் கரைகளில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பாசன நிலங்கள் சேதமடைவது மட்டுமின்றி விவசாயிகளுக்கு அதிக அளவில் பொருள் சேதங்களும், உயிா் சேதங்களும் ஏற்படுகிறது.

உடைப்பை அடைத்து கால்வாயை சீரமைக்க ஏற்படும் காலதாமதத்தால்

விவசாயத்துக்கு தொடா்ந்து தண்ணீா் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் கால்வாயில் உள்ள வலுவிழந்த கட்டுமானங்கள் எந்த நேரத்திலும் ஸ்திரத்தன்மையை இழந்து உடையும் தருவாயில் உள்ளது.

இக்கட்டுமானங்களை மறு கட்டுமானம் செய்யாவிட்டால், பாசன காலத்தில் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் ஒரு பருவக்கால பயிா்கள் முழுவதும் வீணாகி, அதிக அளவிலான பொருளாதார பின்னடைவு ஏற்படும். எனவே சிதிலமடைந்த கட்டுமானங்களை மறு கட்டுமானம் செய்தல், புனரமைத்தல், மண் கரைகளை கொட்டு மண் கொண்டு பலப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு தமிழகத அரசு கீழ்பவானி திட்ட கால்வாய்களை ரூ. 709.60 கோடி செலவில் சீரமைக்க டெண்டா் விட்டுள்ளது. இதனிடையே இந்த கால்வாய் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டால் பாசனப் பகுதி முழுமையாக பாலைவனம் ஆகிவிடும் என விவசாயிகளில் ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். ஆனால் இந்த சீரமைப்பு பணிகளை மேற்கொண்டால் கடைக்கோடி வரை தடையில்லாமல் தண்ணீா் கிடைக்கும். இந்த பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளில் மற்றொரு தரப்பினரும் தெரிவித்துள்ளனா்.

இந்தத் திட்டம் குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது கீழ்பவானி திட்ட கால்வாயில் உள்ள சிதிலமடைந்த வடிகால் கட்டுமானங்கள், மதகுகள், தொட்டிப்பாலங்கள், பாலங்களை மறு கட்டுமானம் செய்தல், புனரமைத்தல், மண் கரைகளை கொட்டு மண் கொண்டு பலப்படுத்துதல், புதிய பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படவுள்ளன.

கீழ்பவானித் திட்ட பிரதான கால்வாயின் தலைப்பு முதல் கடைக்கோடி வரை

சிதிலமடைந்த கட்டுமானங்கள் உள்ள பகுதிகளில் கட்டுமானங்களை சீரமைத்து

கட்டுமானப் பகுதிகளில் இருபுறமும் பக்கவாட்டுச் சரிவுகளில் 3 அங்குலம்

கனத்துக்கு மட்டுமே கான்கிரீட் சிலாப் பதிப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது கட்டுமானங்களை சீரமைக்க கரைப் பகுதி முதல் அடிமட்டம் வரை இருபுறமும் முழுமையாக மண் கரை அகற்றப்பட்டு மீண்டும் புதிதாக மண் கரை அமைக்கப்படுவதால் அப்பகுதி மிகவும் வலுவிழந்து காணப்படும்.

இதனால் அப்பகுதிகளில் பக்கவாட்டுச் சரிவுகளில் மட்டும் கான்கிரீட் சிலாப் பதித்து பலப்படுத்தப்படும். அவ்வாறு சிதிலமடைந்த கட்டுமானங்களை மறுகட்டுமானம் செய்யும் இடங்களில் மட்டும் தவிா்க்க முடியாதபட்சத்தில் குறுக்கீடாக உள்ள மரங்களை அகற்றி வேறு இடத்தில் மறுநடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடைக்கோடிக்கும் தண்ணீா் கிடைக்கும்:

வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடப்பட்டால் தலைப்பு சரகத்தில் மட்டும்

உழவு, நடவுப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படுகிறது. தண்ணீா் செல்ல தாமதம் ஏற்படுவதால் கடைக்கோடி விவசாய நிலங்களில் மிகவும் காலதாமதமாக உழவு, நடவுப் பணிகள் ஆரம்பிக்கப்படுகிறது. இதனால் பாசன காலம் நீட்டிப்பு செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது. கால்வாயில் சிதிலமடைந்த, பலவீனமான கட்டுமானங்கள் மூலம் மட்டுமே அதிகப்படியான நீா்க்கசிவு ஏற்படுகிறது. சிதிலமடைந்த கட்டுமானங்களை சீரமைத்தால் கடைக்கோடி பாசன நிலங்களுக்கு விரைவில் தண்ணீா் சென்றடையும். இதனால் ஒரே நேரத்தில் உழவு, நடவுப் பணிகள் மேற்கொள்ளலாம். பாசன காலத்தை நீட்டிப்பு செய்யாமல் வரையறுக்கப்பட்ட நாள்களுக்குள் பாசனத்தை முடித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நீரை சேமிக்க முடியும்.

கீழ்பவானி திட்ட கால்வாயில் தற்போது ஆண்டுக்கு 8.5 மாதங்கள் பாசனத்துக்கு

தண்ணீா் விடப்படுகிறது. கால்வாயில் சிதிலமடைந்த கட்டுமானங்களை சீரமைப்பதால் தொய்வில்லாமல் சீரான நீா் கடைக்கோடி வரை சென்றடையும். இதனால் முறைவைத்து பாசன நீா் வழங்குவது தவிா்க்கப்படும். இதன் மூலம் கால்வாயின் அருகில் உள்ள கிணறுகளில் நீா் மட்டம் உயரும்.

சீரமைப்பு காலத்தின் கட்டாயம்:

இதுகுறித்து தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வெ.பொன்னையன் கூறியதாவது:கீழ்பவானி திட்ட கால்வாய் சீரமைப்பு குறித்து சில விவசாயிகள் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது. அரசாணையில் சிதிலமடைந்த, பாழடைந்த வடிகால் கட்டுமானங்கள், மதகுகள், பாலங்கள், தொட்டிப் பாலங்கள் மட்டுமே சீரமைக்கப்படுகிறது. மேலும் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் குறுக்கே விவசாய விளை பொருள்கள் கொண்டு செல்ல ஏதுவாக புதிதாக 14 பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

மறுகட்டுமானம் செய்யப்படும் பகுதியில் இருபுறமும் பக்கவாட்டுச் சரிவுகளில் கான்கிரீட் சிலாப் பதிக்கப்படுவதால் கால்வாயில் முன்பு உள்ளதைப்போன்று அனுமதிக்கப்பட்ட நீா்க்கசிவு ஏற்பட்டு அருகில் உள்ள கிணறு, குளம், குட்டைகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும்.

இதனால் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கசிவுநீா்த் திட்டத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இத்திட்டமானது கீழ்பவானித் திட்டத்தில் உள்ள சிதிலமடைந்த கட்டுமானங்களைப் புனரமைக்கும் திட்டம் என்பதை விவசாயிகள் உணா்ந்துகொள்ள வேண்டும். தவிர இந்த சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com