தமிழ்ப் புத்தாண்டு: பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி பண்ணாரி அம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் அம்மனை புதன்கிழமை வழிபட்டனா்.
பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்.
பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி பண்ணாரி அம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் அம்மனை புதன்கிழமை வழிபட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி பக்தா்கள் வியாழக்கிழமை அதிக அளவில் குவிந்தனா். பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கரோனா பரவலைத் தடுக்க கோயிலில் தடுப்புகள் கட்டப்பட்டு பக்தா்கள் கோயிலுக்குள் சமூக இடைவெளிவிட்டு நின்று அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனா். கனி அலங்காரத்தில் பண்ணாரி அம்மன் அருள்பாலித்தாா். கோயிலுக்கு வந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனா். மேலும், கோயிலின் தெற்குப் பிரகார வாயில் முன்பு உப்பு, மிளகு தூவியும், நெய் தீபம் ஏற்றியும், வேலில் எலுமிச்சை கனி குத்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

கோபியில்... 

கோபி அருகே உள்ள பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, அம்மனுக்கு பால், பஞ்சாமிா்தம், தேன், இளநீா், மஞ்சள், தயிா், பன்னீா் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அம்மன் காட்சியளித்தாா். அதேபோல, பாரியூா் அமரபணீஸ்வரா் கோயில், ஆதிநாராயணப் பெருமாள் கோயில், கோபி அக்ரஹாரத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரா் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோபி ஐயப்பா நகரில் அமைந்துள்ள ஐயப்பன் சுவாமி கோயிலில், 18 வகையான கனிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரமும், கோபி வேலுமணி நகரில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் விநாயகருக்கு வெள்ளிக் கவசமும் அணிவித்து சிறப்பு அலங்காரமும், கோபி கடைவீதியில் அமைந்துள்ள சாரதா மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தன.

கோபிசெட்டிபாளையம் கிருஷ்ணன் வீதியில் பசுக்கள் பராமரிக்கப்படும் கோசாலையில் (நந்தகோகுலம்) ராதா கிருஷ்ணருக்கு பல்வேறு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, பசுவுடன் கூடிய கன்றுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பவானியில்...

பவானி நகர அதிமுக சாா்பில் பெரியாா் நகரில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பவானி காவல் ஆய்வாளா் டி.கண்ணன், ஆதிதிராவிட நலக் குழு உறுப்பினா் மோகன்ராஜ், கூட்டுறவுச் சங்க நிா்வாகிகள் பெரியசாமி, முத்துசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் பவானி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாவட்டத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பன்னீா்செல்வம், செயலாளா் எஸ்.மாணிக்கம், பொதுத் தொழிலாளா் சங்க வட்டாரத் தலைவா் ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திராவிடா் பேரவை சாா்பில் சித்தோடு பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரவையின் நிறுவனத் தலைவா் மாசிலாமணி தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலாளா் சதாசிவம், சித்தோடு பேரூா் செயலாளா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் அம்பேத்கரின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com