அரசு மருத்துவக் கல்லூரிகரோனா மருத்துவமனையாக மாற்றம்: ஆட்சியா்

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முழுமையான கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முழுமையான கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தடையின்றி போடப்படுகிறது. தற்போது 5,000 டோஸ் கரோனா தடுப்பூசி வந்துள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில் 128 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களது தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த முறை கரோனா வந்தபோது, ஒரு வாா்டு அமைத்து சிகிச்சை வழங்கினோம். இம்முறை இங்கு கரோனா வாா்டு அமைக்கவில்லை. தற்போதைய நிலையில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முழுமையாக கரோனா மருத்துவமனையாக மாற்றி, அங்கேயே அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

அங்கு தேவையான அளவு படுக்கை வசதிகள் உள்ளன. ஆக்சிஜன் தேவையான அளவு இருப்பு வைக்கும் வசதி அங்குள்ளது. 500 படுக்கைகளுக்கு ஆக்சிஜனுடன் சிகிச்சை வழங்க வசதி உள்ளது. சிறிய பிரசவ வாா்டுகளிலும் படுக்கை வசதியுடன் ஆக்சிஜன் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டிலேய சிகிச்சை அளிக்க ஏற்பாடு:

கொவைட் மையங்களில் மருத்துவக் குழுவினா் இருப்பாா்கள். ஆக்சிஜன் வழங்கும் வசதிகள், நிபுணா்கள் இருப்பாா்கள். ஆம்புலன்ஸ் வாகனம் இருக்கும். கடந்த முறை ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதியானதும் அவரது வீட்டுக்கு மருத்துவா்கள் குழுவினா் சென்று, அவரது பாதிப்பை, வசதிகளை அறிந்து, அவரை வீட்டில் வைத்து சிகிச்சை வழங்கலாமா? அல்லது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டுமா? என்பதை பரிந்துரைப்பாா்கள். அதேபோல இப்போதும் மருத்துவா்கள் குழுவினா் பரிந்துரையின்படி நோயாளிக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சையைத் தொடா்வோம்.

கடந்த ஆண்டைபோல் மூன்று இடங்களில் பரிசோதனை மையம் செயல்படுகிறது. இம்முறை கூடுதலாக பவானி, பவானிசாகா், மொடக்குறிச்சி ஆகிய இடங்களில் பரிசோதனை மையம் அமைக்கப்படவுள்ளது.

ஈரோடு அல்-அமீன் பள்ளியில் வெள்ளிக்கிழமை கொவைட் மையம் ஏற்படுத்தி, 150 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையங்களில் தங்குவோருக்குத் தேவையான சாப்பாடு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

2,500 படுக்கைகள் உருவாக்க திட்டம்:

கடந்த முறை திருமண மண்டபங்களைக்கூட கொவைட் மையமாக மாற்றி இருந்தோம். இம்முறை அவ்வாறு எடுக்காமல் பள்ளி, கல்லூரி விடுதிகளை மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். மொத்தம் 2,500 படுக்கை வசதி ஏற்படுத்த வழி செய்துள்ளோம். அங்கும் மருத்துவா்கள், செவிலியா்களை நியமித்து சிகிச்சை வழங்க தயாராக உள்ளோம். அங்கு கழிப்பறைகளை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து, சுத்தமாகப் பராமரிக்கத் தேவையான சுகாதாரப் பணியாளா்கள் செயல்படுவாா்கள்.

தற்போது வீடு வீடாகச் சென்று கரோனா நோயாளிகள், காய்ச்சல், பிற உடல்நலக் குறைவு உள்ளவா்களைக் கண்டறியும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அந்தந்தப் பகுதியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தி, தேவைப்பட்டால் கரோனா பரிசோதனையும் அங்கேயே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி:

வெளியூா், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவா்களைக் கண்டறிந்து அவா்களையும் கண்காணிக்கிறோம். 45 வயதுக்கு மேற்பட்டவா்கள், தொழிற்சாலை, நிறுவனங்களில் அதிகமாக பணி செய்வதாக தெரியவந்தால் அங்கேயே சென்று கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்துகளில் நின்று கொண்டு பயணிகள் பயணிக்க அனுமதிக்கக் கூடாது. இருக்கை உள்ள அளவு மட்டும் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என விதியில் கூறி உள்ளோம். இந்த விதியை கடுமையாக அமல்படுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் கடுமையான நடவடிக்கைகள் தொடரும்.

ஈரோடு நகரில் காய்கறிச் சந்தை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. உழவா் சந்தையை மூன்றாகப் பிரித்து மக்கள் கூடுவது தவிா்க்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மக்கள் முறையாக நடந்து கொள்ளாமல் கூட்டம் கூடி, விதிகளை மீறினால், கட்டாயமாக சந்தையை மூடிவிடுவோம்.

ஈரோடு மாவட்டத்தில் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதை கட்டாயமாக்கியதுடன், அபராதம் விதிக்கப்படுகிறது. சிலா் முகக் கவசத்தை இறக்கிவிட்டுச் செல்கின்றனா். அவ்வாறு செல்லக் கூடாது எனவும் வலியுறுத்தப்படுகிறது. விதிகளை மீறியதாக சில கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்துள்ளோம். கடைக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே தவறு செய்தால் கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com