கரோனா சிகிச்சைக்கு 3,626 படுக்கைகள் தயாா்: ஆட்சியா்

கரோனா பாதிப்புக்குள்ளானவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்கள் தயாா் நிலையில் உள்ளன

கரோனா பாதிப்புக்குள்ளானவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் மொத்தம் 3,626 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 16,293 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு 15,435 போ் குணமடைந்துள்ளனா். 676 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 400 படுக்கைகள், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 208 படுக்கைகள், கோபி, பவானி, சத்தியமங்கலம், அந்தியூா், பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் 684 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. இதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 186 நபா்கள், புற நோயாளிகள் 38 நபா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தவிர தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களான கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் 500, கோபி கலை, அறிவியல் கல்லூரியில் 150, அந்தியூா் ஐடியல் பள்ளியில் 1,500, வேளாளா் பொறியியல் கல்லூரி விடுதியில் 150, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150, செங்குந்தா் கல்லூரியில் 100, கூகலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30, நம்பியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30, திங்களூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30, சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30, சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் என 2,700 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.

லோட்டஸ் மருத்துவமனையில் 38, சுதா மருத்துவமனையில் 104, அபிராமி கிட்னி கோ் சென்டரில் 15, ஈரோடு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் 25, ஈரோடு எஸ்.கே. மருத்துவமனையில் 30, ஈரோடு சி.எஸ்.ஐ. மருத்துவமனையில் 30 என 242 படுக்கைகள் தனியாா் மருத்துவமனைகளில் தயாா் நிலையில் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 426 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

வியாழக்கிழமை வரை 4,61,557 நபா்கள், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 2,889 நபா்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனா். ஏப்ரல் 15ஆம் தேதி வரை 97,441 நபா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்போது முகக் கவசம் அணியாமல் இருந்தால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் வாடிக்கையாளா்களை முகக் கவசம் அணியாமல் அனுமதித்தாலோ அல்லது அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படுவதோடு ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com