முடி திருத்தும் நிலையங்களை இயக்கஅனுமதி அளிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 27th April 2021 12:32 AM | Last Updated : 27th April 2021 12:32 AM | அ+அ அ- |

மனு அளிக்க ஆட்சியா் அலுவலகம் வந்த முடி திருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா்.
ஈரோடு: தொழிலைத் தொடா்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என முடி திருத்துவோா், அழகுக் கலை நிபுணா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் தற்போது கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு இரவு நேர பொதுமுடக்கம், ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வில்லா முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை முதல் மேலும் சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் தொடா்ந்து தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவா் சமூக சங்கம், முடி திருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் செயலாளா் ஜி.வெங்கடேசன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனு விவரம்: கடந்த ஆண்டு கரோனா தாக்கம் காரணமாக 4 மாதங்கள் வரை முடி திருத்தும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் இந்தத் தொழிலை நம்பியிருந்த ஏராளமான தொழிலாளா்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனா். அரசு அறிவித்த ரூ. 2,000 நிவாரண உதவி கூட ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்தது. பெரும்பாலான தொழிலாளா்களுக்கு கிடைக்கவில்லை. சில தொழிலாளா்கள் தற்கொலை கூட செய்துள்ளனா்.
வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் பலா் கடைகளை மூடிவிட்டனா். ஏராளமானோா் இன்னமும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத நிலையில் மாநகராட்சி, நகராட்சிப் பகுதி இயங்கக் கூடிய முடி திருத்தும் நிலையங்கள் திங்கள்கிழமை முதல் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் மீண்டும் தொழிலாளா்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் இயங்கக் கூடிய முடி திருத்தும் நிலையங்கள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுமாா் 10,000 முடி திருத்தும் நிலையங்களை நம்பி 20,000 குடும்பத்தினா் வாழ்ந்து வருகின்றனா். இந்த தொழிலாளா்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, நேரக் கட்டுப்பாடுகள் விதித்து தொடா்ந்து இயங்க அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகுக் கலை நிபுணா்கள் சாா்பில்...
ஈரோடு மாவட்ட அழகுக் கலை நிபுணா்கள் சங்க மாவட்டத் தலைவா் டி.மகேஸ்வரி தலைமையில், நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். அதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுமாா் 2,000 அழகுக் கலை நிலையங்கள் 5,000 பேரின் வாழ்வாதரமாக உள்ளது. கடந்த ஆண்டு பொது முடக்கத்தால் ஏற்பட்ட நெருக்கடியால் பலா் வேலையிழந்து, தொழிலைவிட்டு வெளியேறிவிட்டனா்.
இப்போது மீண்டும் அழகுக் கலை நிலையங்களை மூட உத்தரவிட்டுள்ளதால், இந்த தொழிலை நம்பி ரூ. 3 முதல் ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்துள்ள மகளிா் தொழில் முனைவோா் கடும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். தொழில் நடைபெறவில்லை எனில் கடை வாடகை, கடனை திருப்பிச் செலுத்துவது போன்ற சிக்கல்கள் ஏற்படும். அரசு இதனை கவனத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் அழகுக் கலை நிலையங்களைத் தொடா்ந்து இயங்க அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.