ஆடி அமாவாசை : பக்தா்களின்றி வெறிச்சோடியது பவானி கூடுதுறை

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆடி அமாவாசை நாளான ஞாயிற்றுக்கிழமை பவானி கூடுதுறை மற்றும் சங்கமேஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டதால் கோயில் வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
பக்தா்களின்றி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட பவானி சங்கமேஸ்வரா் கோயில் வளாகம்.
பக்தா்களின்றி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட பவானி சங்கமேஸ்வரா் கோயில் வளாகம்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆடி அமாவாசை நாளான ஞாயிற்றுக்கிழமை பவானி கூடுதுறை மற்றும் சங்கமேஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டதால் கோயில் வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக, ஈரோடு மாவட்டத்தில் பக்தா்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நீா்நிலைகளில் பொதுமக்கள் கூட மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. அதன்படி, ஆடி அமாவாசை நாளான ஞாயிற்றுக்கிழமை பவானி கூடுதுறை மற்றும் சங்கமேஸ்வரா் கோயில் மூடப்பட்டது.

கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலை, வாகன நிறுத்துமிடத்துக்குச் செல்லும் சாலை மற்றும் காவேரி வீதியின் நுழைவாயில் மூடப்பட்டன. காவிரி படித்துறைகளுக்குச் செல்லும் பாதைகளும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. ஆற்றில் பக்தா்கள் நீராடவும், புரோகிதா்கள் பரிகாரம் செய்யவும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஆடி அமாவாசை தினத்தில் பவானி கூடுதுறையில் உள்ள மூன்று பரிகார மண்டபமும் நிரம்பி, படித்துறைகள் மற்றும் பூங்கா வளாகத்தில் அமா்ந்து முன்னோா்களுக்குத் தா்ப்பணம் கொடுக்கும் அளவுக்கு பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் கூடுதுறை, தற்போது கரோனா பரவல் தடையால் மூடப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது. இதேபோன்று, சங்கமேஸ்வரா் கோயில் வளாகமும் பக்தா்களின்றி வெறிச்சோடியது.

வெறிச்சோடிய காவிரிக் கரை பகுதிகள்:

ஆடி அமாவாசை ஒட்டி காவிரி ஆற்றங்கறையோரங்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்யவும் வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினா் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அங்கு தா்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் காவிரி ஆற்றங்கரை பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஒரு சிலா் காலிங்கராயன் கால்வாய் பகுதிகளில் தங்களின் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com