அரசு ஊழியா் சங்கப் பெயரை பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 13th August 2021 02:57 AM | Last Updated : 13th August 2021 02:57 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கப் பதிவு எண், பெயரை விதிகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்தும் நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து சங்க ஈரோடு மாவட்டச் செயலாளா் விஜயமனோகரன், தலைவா் ராக்கிமுத்து ஆகியோா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் கடந்த 1984இல் துவங்கப்பட்டது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் இணைந்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம், ஊதியக் குழு நிா்ணய மாற்றம் என பலவற்றை நிறைவேற்றி உள்ளோம்.
இச்சங்க மாண்பை, நற்பெயரை சீா்குலைக்க சில முன்னாள் நிா்வாகிகள், சங்கத்தில் இருந்து வெளியேறியவா்கள், சங்கத்தின் பதிவு எண், பெயரைப் பயன்படுத்தி ஊழியா்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனா். சங்க நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் அதிகாரம் மாநாட்டுக்கு உண்டு. கடந்த 2019இல் தஞ்சையில் மாநாடு நடத்தி நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அப்போது தோற்ற அணியினா் குழு அமைத்து அனைத்துத் துறை ஒருங்கிணைப்புக் குழு, சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் என வேறு பெயரில் குழப்பம் ஏற்படுத்துகின்றனா்.
இனி இதுதான் அரசு ஊழியா் சங்கம் எனக் கூறி அரசு ஊழியா் சங்க மாவட்ட மாநாடு, மாநில செயற்குழுக் கூட்டத்தை அறிவித்துள்ளனா். அரசு ஊழியா் சங்கத்தை உடைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஈரோட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடப்பதாக உள்ள மாநில செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கப் பதிவு எண், கொடி, பேனா், லோகோவை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.