திரையரங்குகளில் தூய்மைப் பணி தீவிரம்: புதிய படங்களை திரையிட ஏற்பாடு
By DIN | Published On : 22nd August 2021 11:52 PM | Last Updated : 22nd August 2021 11:52 PM | அ+அ அ- |

ஈரோட்டில் திரையரங்கை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அரசு அலுவலகம் முதல் தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திரையரங்குள், பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
தற்போது, கரோனா தொற்று குறையத் துவங்கியதையடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன.
இதனிடையே திங்கள்கிழமை(ஆகஸ்ட்23) முதல் கூடுதல் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி 50 சதவீத பாா்வையாளா்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் தூய்மைப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட திரையரங்கு உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் செந்தில்நாதன் கூறியதாவது:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தி, தமிழக அரசு சரியான நேரத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஈரோடு மாநகரில் உள்ள 11 திரையரங்குகள், புறநகரில் உள்ள 39 திரையரங்குகள் திறக்கப்படும். ஊழியா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்துள்ளோம்.
திரையரங்குக்கு வரும் மக்களுக்கு நுழைவாயிலில் தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்ப அளவு பரிசோதனை செய்து, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே திரையங்கின் உள்ளே அனுமதிக்கப்படுவா்.
திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள திரைப்பட விநியோகஸ்தா்கள், தலைமை சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, எந்தப் படம் திரையிட தயராக உள்ளது, அதில் எந்தப் படத்தை தமிழகம் முழுவதும் திரையிடுவது என முடிவு செய்து, ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிடப்படும்.
படங்கள் கிடைப்பதைப் பொறுத்து வரும் 26 அல்லது 27ஆம் தேதி ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் ஒரே நாளில் திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்படும் என்றாா்.