5 மாதங்களாக பூட்டப்பட்ட நகை அடகுக் கடை:பொதுமக்கள் போராட்டம்
By DIN | Published On : 22nd August 2021 11:55 PM | Last Updated : 22nd August 2021 11:55 PM | அ+அ அ- |

நகை அடகுக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
அடகுக் கடை 5 மாதங்களாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டித்து நகை அடகுவைத்தவா்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பெரியவலசு பகுதியில் நகை அடகுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை அதே பகுதியை சோ்ந்த அசோக் என்பவா் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறாா். இந்த அடகுக் கடையில் அதே பகுதியைச் சோ்ந்த சுமாா் 200க்கும் மேற்பட்ட மக்கள் அரை பவுன் முதல் 5 பவுன் வரை என சுமாா் 500 பவுன் அளவுக்கு நகைகளை அடமானம் வைத்து இருந்தனா்.
இந்நிலையில், இந்த அடகுக் கடை கடந்த பிப்ரவரி மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் நகைகளை அடமானம் வைத்திருந்த மக்கள், கடையின் மேலாளா் சரவணன் என்பவரிடம் இது குறித்து விவரம் கேட்டு வந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அடகுக் கடைக்கு மேலாளா் வந்திருப்பதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நகை அடகுவைத்த 50க்கும் மேற்பட்ட மக்கள் கடை முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலாளரிடம் அடகு வைத்த நகைகள் குறித்து கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரிடம் அடகு வைத்த நகைகளை மீட்டுத் தரவேண்டும் எனத் தெரிவித்தனா். நகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.