சத்தியமங்கலம்: மின் வேலியில் சிக்கி மக்னா யானை உயிரிழப்பு
By DIN | Published On : 23rd August 2021 11:32 AM | Last Updated : 23rd August 2021 11:34 AM | அ+அ அ- |

மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மக்னா யானை.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஜீரஹள்ளி ஜோராஓசூரில் மின் வேலியில் சிக்கி மக்னா யானை உயிரிழந்தது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஜீரஹள்ளி வனப்பகுதியையொட்டி ஜோராஓசூர் உள்ளது. வனவிலங்குகள் அடிக்கடி தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் இப்பகுதி விவசாயிகள் மின்வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் உருளைக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். யானைகள் விளைநிலத்தில் புகாதபடி மின்வேலி அமைத்துள்ளார். இன்று ஜீரஹள்ளி வனத்தில் இருந்து வெளியேறிய 30 வயதுள்ள மக்னா யானை, ஜேம்ஸ் தோட்டத்துக்குள் புகுந்தபோது அங்கு அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை கைபற்றி ஆய்வு செய்தபோது, அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் திருடப்பட்டு மின்வேலியில் பாய்ச்ச்சியதால் எதிர்பாராதவிதமாக மின்வேலியை தொட்ட யானை சம்பவயிடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக தோட்டத்து உரிமையாளர் ஜேமஸை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.