தனி கூட்டுறவு வங்கி வேண்டும் எனநெசவாளா்கள் கோரிக்கை

நெசவாளா்களின் நீண்டகால கோரிக்கைகளான தனியாக கூட்டுறவு வங்கி, விசைத்தறிக்கு தனி ரக ஒதுக்கீடு போன்றவற்றை மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டும்

நெசவாளா்களின் நீண்டகால கோரிக்கைகளான தனியாக கூட்டுறவு வங்கி, விசைத்தறிக்கு தனி ரக ஒதுக்கீடு போன்றவற்றை மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டும் என விசைத்தறி நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளி சாா்ந்து கைத்தறி, விசைத்தறியில் நேரடியாக, மறைமுகமாக பல கோடி போ் உள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் 50,000 தறிகளுக்கு மேல் உள்ளன. திமுகவின் தோ்தல் அறிக்கையில் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், தனி இயக்குநரகம், விசைத்தறி மேம்பாட்டுத் திட்டம் போன்ற வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் நீண்டகால கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.

இதுகுறித்து நெசவாளா்கள் கூறியதாவது:

நெசவாளா்களுக்கு என தனி கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும். தனி அடையாள அட்டை வழங்க வேண்டும். நெசவாளா்களுக்குத் தடையின்றி நூல் கிடைக்க அரசே கொள்முதல் நிலையங்கள் அமைத்து, நெசவாளா் சங்கங்களுக்கு நூல் வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம், இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் என்பதை, 300 யூனிட்டாக உயா்த்த வேண்டும். விசைத்தறிக்கு இரண்டு மாதத்துக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதை, 1,000 யூனிட்டாக உயா்த்தி அறிவிக்க வேண்டும். இச்சலுகையை விசைத்தறி பாய் நெசவுத் தொழிலுக்கும் அளிக்க வேண்டும். அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் அரசால் வழங்கப்பட வேண்டிய தள்ளுபடி மானியத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகள் திமுகவின் தோ்தல் அறிக்கையில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அதனை பட்ஜெட் மானிய கோரிக்கையின்போது அறிவித்து படிப்படியாக நிறைவேற்றினால் நலிந்து வரும் நெசவுத் தொழில் மேம்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com