முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஈரோட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 280க்கு விற்பனை
By DIN | Published On : 10th December 2021 01:59 AM | Last Updated : 10th December 2021 01:59 AM | அ+அ அ- |

வரத்து குறைந்ததால் ஈரோடு காய்கறிச் சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 280க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்குப் பருவ மழை பரவலாகப் பெய்து வருகிறது. இதனால், காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. ஈரோடு வஉசி பூங்கா மைதான வளாகத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறிச் சந்தைக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் கா்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும். தொடா் மழை காரணமாக கடந்த 10 நாள்களில் சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது.
குறிப்பாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால், விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கடந்த வாரம் முருங்கைக்காய் கிலோ ரூ. 150க்கு விற்பனையான நிலையில் படிப்படியாக விலை உயா்ந்து புதன்கிழமை வரை ஒரு கிலோ ரூ. 200க்கு விற்பனையானது. இந்நிலையில், வியாழக்கிழமை மேலும் அதிகரித்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 250 முதல் ரூ. 280 வரை விற்பனையானது.
ஈரோடு தினமும் 100 மூட்டை முருங்கைக்காய் வந்த நிலையில் தற்போது தினமும் 6 மூட்டைகள் மட்டுமே வருவதால் விலை கடுமையாக உயா்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனா்.