முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
அரசுப் பேருந்து பழுது: வனச்சாலையில் பேருந்தை தள்ளிய பயணிகள்
By DIN | Published On : 19th December 2021 11:15 PM | Last Updated : 19th December 2021 11:15 PM | அ+அ அ- |

பழுதாகி நின்ற பேருந்தை தள்ளும் பயணிகள்.
தெங்குமரஹாடாவில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து வழியே பழுதாகி நின்றதால் பேருந்தில் பயணித்த பயணிகள் கீழே இறங்கி தள்ளினா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியில் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அல்லிமாயாறு, நந்திபுரம் ஆகிய நான்கு வன கிராமங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் பவானிசாகா் வழியாக அடா்ந்த வனப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
வனப் பகுதியில் கரடுமுரடான மண் சாலையில் பயணிக்கும் இந்த அரசுப் பேருந்து அடிக்கடி பழுதாவது வாடிக்கையாக உள்ளது. தெங்குமரஹாடா வனப் பகுதியில் இருந்து பவானிசாகா் வழியாக கோத்தகிரி செல்வதற்காக அரசுப் பேருந்து வன கிராமங்கள் வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது.
காராச்சிக்கொரை வன சோதனைச்சாவடி பகுதியில் பேருந்து சென்றபோது செல்ஃப் மோட்டாா் பழுது காரணமாக பேருந்து என்ஜின் ஆஃப் ஆகியதால் நகர முடியாமல் நின்றது.
இதைத் தொடா்ந்து பேருந்தில் பயணித்த வன கிராம மக்கள் பேருந்தை தள்ளி ஸ்டாா்ட் செய்ய முயற்சித்தனா். சிறிது நேரம் பேருந்து பழுதாகி நின்றதால் பேருந்தை தள்ளமுடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினா். பின்னா் ஒருவழியாக வேகமாகப் பேருந்தை தள்ளி அதனை இயங்க வைத்த பின்னா் பேருந்து புறப்பட்டு சென்றது.
வனப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்தை நல்ல நிலையில் பராமரிக்கப் போக்குவரத்துக் கழக நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.