காா் ஓட்டிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு: மின் வாரிய ஓட்டுநா் பலி, 5 போ் காயம்

ஈரோடு மாவட்டம், கோபி அருகே காா் ஓட்டிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதில் மின் வாரிய ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே காா் ஓட்டிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதில் மின் வாரிய ஓட்டுநா் உயிரிழந்தாா். கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில், 5 போ் காயமடைந்தனா்.

வேட்டைக்காரன் கோயில் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டாடா சுமோ வாகனம் இயக்கப்பட்டு வந்தது. கோபி கருமாயாள் வீதியைச் சோ்ந்த அதியமான் (64) ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

திங்கள்கிழமை காலை வழக்கம்போல வேட்டைக்காரன் கோயிலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து ஓட்டுநா் அதியமான், மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெயகுமாா், உதவிப் பொறியாளா்கள் சொக்கலிங்கம், ராஜசேகா், காா்த்திக் ஆகியோா் சென்று கொண்டிருந்தனா்.

வடுகபாளையம் என்ற இடத்தில் சென்றபோது அதியமான் திடீரென மயங்கி சரிந்தாா். இதனால், வாகனம் அதிக வேகத்துடன் தாறுமாறாக ஓடியது. இதை கவனித்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக வாகனத்தைக் கட்டுப்படுத்த முயல்வதற்குள், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதி 100 மீட்டா் தூரத்துக்கு இழுத்துச் சென்றது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த ரவிசந்திரன், அவரது மகள் பானுமதி ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இருசக்கர வாகனம் மீது மோதிய வேகத்தில் டாடா சுமோ வாகனம் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவா் மீது மோதி நின்றது. இதில், வாகனத்தில் இருந்த மின்வாரிய அதிகாரிகளும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்த பொதுமக்கள் வாகன இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவா்களை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், அவா்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com