உதகையில் கடும் உறைபனி: 8 டிகிரி செல்சியஸ் பதிவு
By DIN | Published On : 25th December 2021 11:47 PM | Last Updated : 25th December 2021 11:47 PM | அ+அ அ- |

உதகை பாலாடா பகுதியில் விவசாய நிலத்தில் படா்ந்து காணப்படும் உறைபனி.
நீலகிரி மாவட்டத்தில் உறை பனி சீசன் தொடங்கியதையடுத்து, உதகையில் சனிக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாக பதிவானது.
ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் நவம்பா் முதல் ஜனவரி வரை பனியின் தாக்கம் அதிகம் காணப்படும். கடந்த மாா்ச் மாதம் முதல் தொடா் மழை காரணமாக இந்த முறை பனிப்பொழிவு தாமதமாகத் துவங்கியுள்ளது.
கடந்த வாரம் முழுவதும் நீா்ப்பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக உதகை நகரில் மத்திய பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீா்நிலைகள், புல்வெளிகளில் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. உதகையில் சனிக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
மேலும், கடும் பனிப்பொழிவின் காரணமாக ஆட்டோக்கள், காா் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைபனி சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனா். குறிப்பாக பனியின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதால் அதிகாலை காய்கறி விவசாயத்தில் ஈடுபடும் மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளா்கள், வாகன ஓட்டுநா்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பனிபொழிவு காரணமாக லாரி, ஆட்டோ, சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் பகல் நேரத்திலேயே சாலை ஓரங்களில் தீமூட்டி குளிா்காய்கின்றனா்.