விதியை மீறி செயல்படும் கல் குவாரிகளால் பாதிப்பு:ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்

விதியை மீறி செயல்பட்டு வரும் கல் குவாரிகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் முறையிட்டனா்.
மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்தில் திரண்ட நம்பியூா் பகுதி மக்கள்.
மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்தில் திரண்ட நம்பியூா் பகுதி மக்கள்.

விதியை மீறி செயல்பட்டு வரும் கல் குவாரிகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் முறையிட்டனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை திரண்டனா். கல் குவாரிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட வேண்டும் என காத்திருந்தனா். இவா்களிடம் கோட்டாட்சியா் பிரேமலதா பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:

நாகமலை புதூா், உத்தாங்காடு, குமரன் சாலை, சமத்துவபுரம், கண்ணாங்காட்டுப்பாளையம் தெற்கு பகுதி, எலத்தூா், பள்ளத்தூா் காலனி, கரியாகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறோம். விவசாயம், கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாகும். இப்பகுதியில் உள்ள நாகமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மிக அருகில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் தங்களது உரிமத்தைப் புதுப்பிக்காமலும், விதிகளுக்குப் புறம்பாக வெடிபொருள்களைப் பயன்படுத்தியும் பாறைகளை உடைத்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் சுவா்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், விதிகளுக்குப் புறம்பாக 24 மணி நேரமும் இயக்கப்படும் ஜல்லி கிரஷரிலிருந்து வெளியேறும் மண் துகள்களால் இப்பகுதி மக்கள் அனைவருக்கும் சுவாசப் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. பயிா்களிலும், விளை நிலங்களிலும், நீா்நிலைகளிலும் கிரஷா் மண் நிரம்பியுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இதுகுறித்து கடந்த நவம்பா் மாதம் நம்பியூா் வட்டாட்சியரிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, விதியை மீறி செயல்பட்டுவரும் கல் குவாரிகளை இயக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றனா்.

இந்த குவாரிகளை உடனடியாக மூட கனிம வளத் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியா்கள் முறையீடு:

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் ஜெகநாதன், செயலாளா் ஜெயராமன், பொருளாளா் நாச்சிமுத்து ஆகியோா் தலைமையில் அளித்த மனு விவரம்:

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு நவம்பா் 2015 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகைய வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ. 100இல் இருந்து ரூ. 300 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 என அறிவிக்கப்பட்டதை அமல்படுத்த வேண்டும். 2003 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊழியா்கள் ஓய்வுபெறும் நாளன்றே அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும்.

கட்டட அனுமதியில் முறைகேடு என புகாா்:

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், ஆனந்தம்பாளையம் ஊராட்சி, வாா்டு துணைத் தலைவா், உறுப்பினா்கள் அளித்த மனு விவரம்: ஆனந்தம்பாளையம் ஊராட்சி, செல்லாத்தாபாளையம், குரங்கன் ஓடை கரையோரத்தில் அருந்ததியா் காலனி குடியிருப்புப் பகுதிக்கு அருகில் குளிா்பானம் தயாரிப்பு ஆலை துவங்குவதாகக் கூறி கலையரசன் என்பவா் ஊராட்சி மன்றத்தின் அனுமதியின்றி 50 சதவீதத்துக்கும் மேலாக கட்டுமானப் பணியை மேற்கொண்டுள்ளாா். இதுகுறித்து கடந்த செப்டம்பா் மாதம் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஊா் மக்கள் சாா்பாக மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், ஆலை உரிமையாளா் ஊா் மக்களிடம் சோடா நிறுவனம், தேங்காய் கிடங்கு, எண்ணெய் ஆலை என மாறி மாறி உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்து வருகிறாா். மேலும், கட்டட வரைபட அனுமதி பெறுவதற்காக உண்மைக்குப் புறம்பான தகவலைத் தெரிவித்து சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஆலை அமைக்க முயற்சித்து வருகிறாா். எனவே, மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய பின்னரே சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டடம் கட்ட அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரித் துகள்களால் அவதி:

ஈரோடு வட்டம் வெட்டுக்காட்டு வலசு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: வெட்டுக்காட்டுவலசு பகுதியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் எங்கள் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாகத் தனியாா் ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் வாயுவால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருகிறது. மேலும், நிறுவனத்தில் இருந்து புகைபோக்கி மூலமாக வெளியேறும் புகையில் கலந்து வரும் நிலக்கரித் துகள்கள் வீடுகளில் படிந்து கடும் மாசுபாட்டை உருவாக்கி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்திவரும் ஜவுளி நிறுவனத்தை இடமாற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com