தை அமாவாசை: பவானி கூடுதுறையில் பக்தா்கள் புனித நீராடி வழிபாடு

தை அமாவாசையையொட்டி புகழ்பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் வியாழக்கிழமை புனித நீராடி வழிபட்டனா்.
பரிகார  வழிபாட்டில்  பங்கேற்ற  பக்தா்கள்.
பரிகார  வழிபாட்டில்  பங்கேற்ற  பக்தா்கள்.

தை அமாவாசையையொட்டி புகழ்பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் வியாழக்கிழமை புனித நீராடி வழிபட்டனா்.

தை அமாவாசை தினமான வியாழக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் மூத்தோா் வழிபாட்டுக்கு திரண்டு வந்தனா். பரிகார மண்டபங்களில் மூதாதையருக்கு எள், தண்ணீா் வைத்து வழிபட்ட பக்தா்கள் காவிரியில் கரைத்து, புனித நீராடினா். தொடா்ந்து சங்கமேஸ்வரா், வேதநாயகி, ஆதிகேசவப் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினா்.

திரளான பக்தா்கள் வந்ததால் பரிகார மண்டபங்கள் நிறைந்து காவிரிக்கரை, திறந்தவெளிகளில் மூத்தோா் வழிபாடு நடத்தப்பட்டது. திருமணத் தடை, செவ்வாய் தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷ நிவா்த்தி பரிகார வழிபாடுகளும் நடத்தப்பட்டன. பவானி காவல் ஆய்வாளா் கண்ணன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தா்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

காவிரி ஆற்றில் தண்ணீா் குறைவாகச் சென்றதால் பக்தா்கள் ஆழமான பகுதிக்கு நீராடச் செல்வதைத் தடுக்க தீயணைப்புப் படையினா் கண்காணித்து வந்தனா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் ஆடி, புரட்டாசி அமாவாசை தினங்களில் பரிகார வழிபாடுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தை அமாவாசை தினத்தில் மூத்தோா் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பண்ணாரியில்...

தை அமாவாசையையொட்டி பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் கூட்டம் வியாழக்கிழமை அதிக அளவில் இருந்தது. வியாழக்கிழமை அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மதியம் 12 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். மலா் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னா் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com