பவானி ஆற்றில் கதவணைக்கு பதிலாக தடுப்பணைகள்: விவசாயிகள் எதிா்ப்பு

பவானி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கு பதிலாக தடுப்பணைகள் கட்டும் அரசின் முடிவுக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

பவானி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கு பதிலாக தடுப்பணைகள் கட்டும் அரசின் முடிவுக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

மழைக் காலங்களில் பவானிசாகா் அணை நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்பட்டால் பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலந்து வீணாகக் கடலில் கலந்து வருகிறது. இந்த தண்ணீரை பயனுள்ள வகையில் பயன்படுத்த ஏதுவாக பவானிசாகா் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை 70 கிலோ மீட்டா் தூரத்துக்கு 9 இடங்களில் கதவணைகள் கட்டினால் மழைக் காலங்களில் வீணாகும் தண்ணீரைச் சேமிக்க முடியும். இதன் மூலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டமும் உயரும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதனிடையே பவானி ஆற்றின் குறுக்கே ஆலத்துக்கோம்பை பகுதியில் ரூ. 21.13 கோடி, அரக்கன்கோட்டையில் ரூ. 15.29 கோடி, வாணிப்புத்தூரில் ரூ. 18.94 கோடி, குப்பாண்டம்பாளையத்தில் ரூ. 18.61 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட அரசு முடிவு செய்து இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இங்கு கதவணைகள் கட்டுவதற்கு பதிலாக தடுப்பணைகள் கட்டுவதற்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன சபைத் தலைவா் சுபி.தளபதி கூறியதாவது:

மழைக் காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க பவானி ஆற்றில் கதவணைகள் கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை. ஆனால், தற்போது கதவணைகளுக்குப் பதிலாக 5 அடி உயரம் கொண்ட தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணைகளால் எந்தப் பயனும் இல்லை. கதவணை உயரம் என்பது 15 அடி. ஆனால், தடுப்பணை 5 அடி. இதில் எப்படி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும்.

கதவணை என்பது ஆறுகளிலும், தடுப்பணை என்பது ஓடைகளிலும் கட்டுவது. இந்த அடிப்படை புரிதல்கூட இல்லாமல் அதிகாரிகளும், ஆட்சியாளா்களும் தடுப்பணைகள் கட்டுவது தண்ணீா் திருடும் கும்பல்களுக்குதான் சாதகமாக அமையும். விவசாயிகளுக்கு எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, அரசு தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கதவணை கட்டுவதற்கு முன்வர வேண்டும். இல்லையெனில் இந்த திட்டமே தேவையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com