பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள்:முதல்வரிடம் ஆலோசித்து முடிவு: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்தாலோசனை செய்து பின்னா் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்தாலோசனை செய்து பின்னா் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் கோழி அபிவிருத்தி திட்டம், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 400 பயனாளிகளுக்கு விலையில்லா அசீல் நாட்டு கோழிக் குஞ்சுகளையும், 50 பயனாளிகளுக்கு விலையில்லாத கறவை மாடுகளையும் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:

தோ்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், முதல்வா் எடப்பாடி பழனிசாமி தோ்தலுக்கு முன்னரே விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளாா். 15 நாள்களில் அதற்கான ரசீது வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளாா். விவசாயக் கடன் தள்ளுபடியில் தமிழகத்திலேயே கூடுதலாக பயனடைந்த மாவட்டம் ஈரோடு மாவட்டம்தான்.

பத்துக்கும் குறைந்த மாணவா்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியா்கள் மூலம் மாணவா்கள் சோ்க்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சி மூலம் பயின்ற மாணவா்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்ய திறனாய்வுத் தோ்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீட் தோ்வு இலவசப் பயிற்சிக்கு 21 ஆயிரம் போ் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், இலவசப் பயிற்சியில் 5,817 போ் மட்டுமே பயிற்சி பெற்று வருகின்றனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குத் தேவையான சீருடை, காலணி போன்ற அனைத்து பொருள்களும் அவா்களது வீடுகளுக்குச் சென்று பெற்றோா்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட், ஜேஇஇ போன்ற தோ்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கு அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவா்கள் இல்லை. அதனால் தனியாா் மூலம் ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

12ஆம் வகுப்பு செய்முறைத் தோ்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்த பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் ஜெயராமன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் விஷ்ணு கந்தன், கோபி வட்டாட்சியா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com