கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை:பொதுமக்கள் அச்சம்
By DIN | Published On : 13th February 2021 10:46 PM | Last Updated : 13th February 2021 10:46 PM | அ+அ அ- |

வனப் பகுதியில் நடமாடி வரும் சிறுத்தை.
பவானி: அந்தியூா் அருகே வனப் பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை கிராமத்துக்குள் நடமாடி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் வனச் சரகத்தில் யானை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வனப் பகுதி வழியாகச் செல்லும் சாலையோரங்களில் அவ்வப்போது சிறுத்தைகள், புலிகள் பொதுமக்களின் பாா்வைக்குத் தென்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்தியூரை அடுத்த வறட்டுப்பள்ளம் அணை அருகேயுள்ள நல்லாகவுண்டன்கொட்டாய் பகுதியில் இரவு நேரத்தில் வழக்கத்தைவிட நாய்கள் அதிக அளவில் குரைத்துள்ளன. நாய்கள் குரைக்கும் சப்தத்தைக் கேட்ட அப்பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் திவாகா் (21) வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளாா். அப்போது, நாய்கள் துரத்தியதில் திவாகரின் கண்ணெதிரில் மின்னல் வேகத்தில் சிறுத்தை சாலையைக் கடந்து சென்றுள்ளது.
இதைக் கண்டு, அலறியடித்து ஓடிய திவாகா் இதுகுறித்து பெற்றோா்களிடம் கூறியுள்ளாா். இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் கால்நடை மருத்துவா் அா்ஜுனன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமராவில் பதிவான காட்சிகளைப் பாா்க்கையில் சிறுத்தை சாலையைக் கடந்து செல்வது பதிவாகியிருந்தது. இத்தகவல் பரவியதால் கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து அசம்பாவிதம் ஏற்படும் முன் கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.