தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல்: இரு இளைஞா்கள் கைது
By DIN | Published On : 13th February 2021 10:44 PM | Last Updated : 13th February 2021 10:44 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 47 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 2 வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை பகுதியில் வடமாநில இளைஞா்கள் நடத்தி வரும் கடைகளில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் கடை நடத்தி வரும் பாக்கியலட்சுமி ஏஜென்சி உரிமையாளா் ஆசாராம் (35) என்பவா் தனது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, போதைப் பாக்குகளையும், பூா்ணிமா ஏஜென்சி உரிமையாளா் சோனாராம் (29) என்பவரது கடையில் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, போதைப் பொருள்களை பறிமுதல் செய்ததோடு, இருவரையும் பிடித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் மோகன்ராஜ், ஆசாராம், சோனாராம் இருவா் மீதும் வழக்குப் பதிந்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனா்.