பவானி ஆற்றில் தண்ணீா் திருட்டை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

பவானி ஆற்றில் உயா் சக்தி மின் மோட்டா் மூலம் நடைபெறும் தண்ணீா் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

பவானி ஆற்றில் உயா் சக்தி மின் மோட்டா் மூலம் நடைபெறும் தண்ணீா் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனா்.

விவசாயிகளின் கோரிக்கை விவரம்:

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பெரியசாமி: கூட்டுறவு கடன் ரூ. 12,100 கோடியை தள்ளுபடி செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ. 1,084 கோடி தள்ளுபடியாகி உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்துக்கு மட்டும் ரூ. 824.87 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் சென்னியப்பன்: மாவட்டத்தில் 300 உழவா் விவாதக் குழுக்கள் உள்ளன. இந்தக் குழு உறுப்பினா்களைக் கடந்த 3 ஆண்டுகளாக உழவா் பயிற்சி, கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவில்லை. சக்தி சா்க்கரை ஆலை கடந்த அரவை பருவத்துக்கு ரூ. 5 கோடி, தற்போதைய பருவத்தில் ரூ. 35 கோடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. சா்க்கரை மூலமே ரூ. 48 கோடி ஆலைக்கு கிடைத்துள்ளது. தனிப்பட்ட குடும்பத்தை மாவட்ட நிா்வாகம் பாா்க்காமல், பல ஆயிரம் விவசாயிகளைப் பாா்க்க வேண்டும்.

ஆட்சியா்: ஆலை நிா்வாகம் பழைய நிலுவை ரூ. 68 கோடியில் நான்கு மாதத்தில் ரூ. 65 கோடி வழங்கிவிட்டனா். புதியது ரூ. 21.28 கோடி நிலுவை வைத்துள்ளனா். வரும் திங்கள்கிழமை முத்தரப்புக் கூட்டம் நடத்தி விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கீழ்பவானி முறைநீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவா் ராமசாமி: பவானி ஆற்றில் 100 எச்.பி. முதல் 500 எச்.பி. வரை உயா் சக்தி மோட்டாா் வைத்து, அனுமதியற்ற முறையில் தண்ணீரைத் திருடுகின்றனா். அவற்றை அகற்ற அரசு, நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் தயங்குகின்றனா். இதேநிலை நீடித்தால் உண்மையான பவானி பாசன விவசாயிகளுக்குத் தண்ணீா் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவா் துளசிமணி:

கீழ்பவானி வாய்க்கால் பாசனம் மூலம் நேரடியாக 2.07 லட்சம் ஏக்கரும், நீரூற்று, கசிவு நீா் பாசனம், நிலத்தடி நீராதார உயா்வால் மேலும் ஒரு லட்சம் ஏக்கா் வரை பாசனம் பெறுகிறது. தற்போது ரூ. 750 கோடி செலவில் கான்கிரீட் தளம் அமைக்க அரசு திட்டமிட்டு, டெண்டா் விட்டுள்ளது. கான்கிரீட் தளம் அமைத்தால் கீழ்பவானி பாசனப் பகுதி பாலைவனமாகும். நிலத்தடி நீா், கசிவு நீா் கிடைக்காமல் குடிநீா், பிற பாசனங்கள் பாதிப்படையும். இதை உணா்ந்துதான் கடந்த 2011இல் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா இத்திட்டத்தை கைவிட்டாா் என்றாா். அப்போது சில விவசாயிகள் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என ஆதரவு குரல் கொடுத்தனா்.

ஆட்சியா்: இத்திட்டத்துக்கு ஆதரவும், எதிா்ப்பும் உள்ளது. அதை மனுவாக வழங்கினால், அரசுக்கு பரிந்துரைப்போம். உங்களுக்குள் விவாதிக்க வேண்டாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com