பழனி பிரசாதத்தை தபால் மூலம் வழங்க நடவடிக்கை

பழனி பஞ்சாமிா்தம் பிரசாதத்தை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஈரோடு: பழனி பஞ்சாமிா்தம் பிரசாதத்தை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயில்களுக்குச் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தேவஸ்தானம் சாா்பில் பஞ்சாமிா்த பிரசாதத்தை அஞ்சல் மூலம் பக்தா்களுக்கு வீடு தேடி வழங்க அஞ்சல் துறையுடன் பழனி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதில் அரை கிலோ பஞ்சாமிா்தம், விபூதி பாக்கெட், முருகனின் ராஜ அலங்கார உருவப்படம் அடங்கிய பாா்சல் வழங்கப்படுகிறது.

தற்போது இந்தத் திட்டம் ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முருகனின் பிரசாதம் பெற விரும்பும் பக்தா்கள் ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்தில் அதற்கான படிவத்தைப் பூா்த்தி செய்து கொடுத்து ரூ. 250 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். பிரசாதப் பொருள்கள் அடங்கிய பாா்சல் விரைவு அஞ்சல் மூலம் வீட்டுக்கு வந்துவிடும்.

ஆதாா் அட்டை திருத்தம்: ஆதாா் அட்டையானது அனைத்து சேவைகளுக்கும் தற்போது தேவைப்படுவதால் பலா் புதிதாக ஆதாா் அட்டை எடுக்கவும், ஆதாா் அட்டையில் திருத்தங்கள் செய்யவும் நேரம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனா். பொதுமக்கள் சிரமத்தைப் போக்கும் வகையில் ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்ந்து ஆதாா் சேவைக்காக பிரத்தியேக சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த சேவை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com